×

பழநியில் தெருநாய் கடித்து சிறுமி உள்பட 9 பேர் காயம்

பழநி, அக். 12: பழநி அதன் சுற்றுப்புற கிராமங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்கள் கடித்ததில்  பழநி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பலர் காயமடைந்து பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். கடந்த மாதம் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்ட பழநியை சேர்ந்த ஒரு பெண் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். நேற்று முன்தினம் இரவு பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சாலையில் நடந்து சென்றவர்களை தெருநாய்கள் துரத்திச்சென்று கடித்தன. இதில் பாலசமுத்திரத்தை சேர்ந்த உதயகுமார் (27), பழநி இந்திரா நகரை சேர்ந்த பிரசாந்த் (20), காமராஜர்நகரை சேர்ந்த மகாமுனி (60), மாயவன் (40), இட்டேரி ரோட்டை சேர்ந்த ஹசீப் (27), பெருமாள் மகன் பூமிநாதன் (25), அழகாபுரியை சேர்ந்த முனீஸ்வரன் (17), மரிச்சிலம்பை சேர்ந்த ராஜா மகள் சத்யபிரியா (6), மதனபுரத்தை சேர்ந்த அங்குராஜ் (30) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளை செலுத்தினர். இதில் 8 பேர் வெளிநோயாளிகாக சிகிச்சை பெற்று சென்றனர். அங்குராஜூக்கு மட்டும் காயம் ஆழமாக இருந்ததால் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய் எதிர்ப்பு மற்றும் ஊட்டசத்து மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் வீட்டுக்கு திரும்பினார். பழநியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தெருநாய் தொல்லையை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : street ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்