×

உள்ளூர் நீராதாரங்கள் மூலம் குடிநீர் திட்டங்களை உருவாக்கினால் செலவு குறையும் செந்தில்குமார் எம்எல்ஏ பேச்சு

திண்டுக்கல், அக். 12: வெகுதூரத்தில் இருந்து நீர் கொண்டு வருவதை விட உள்ளூர் நீராதாரங்களில் இருந்து குடிநீர் பெறுவதால் செலவும் குறையும். திட்டமும் பயனளிக்கும் என்று சட்டப்பேரவை குழுவிடம் செந்தில்குமார் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். திண்டுக்கல்லில் சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. குழுத் தலைவர் செம்மலை தலைமை வகித்தார். கலெக்டர் வினய் முன்னிலை வகித்தார். இதுகுறித்து தலைவர் பேசியதாவது: அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாகவும், சிக்கனமாகவும் செயல்படுத்துவது அரசின் கடமையாகும். இதுகுறித்து ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கையை இக்குழு சமர்பிக்கும் என்று தெரிவித்தார். பழநி எம்எல்ஏ செந்தில்குமார் பேசுகையில், ‘கொடைக்கானல் ஏரியை தூய்மைப்படுத்த ரூ.89 கோடி ஜெயலலிதா காலத்தில் ஒதுக்கப்பட்டது.

துர்நாற்றத்துடன், கழிவுநீர் கலப்புடன் ஏரி இருக்கிறது. இந்தப் பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. கரூர் அருகில் இருந்து கூட்டுக்குடிநீர் கொண்டு வருவதால் கடைசி பகுதிக்கு நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தூரமான பகுதியில் இருந்து நீர் கொண்டு வருவதை விட அருகில் உள்ள நீராதாரங்களை மேம்படுத்தி பயன்படுத்த வேண்டும். அதன்படி பழநியில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் திருமூர்த்தி அணை உள்ளது. இங்கிருந்து பழநிக்கு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் பழநிக்கு ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைக்கும். பழநியில் ரூ.21 கோடி செலவில் குடிநீர் செயல்படுத்தப்பட்டுள்ளது. 90 சதவீத பணிகள் முடிந்து குடிநீர் முறையாக கிடைக்கவில்லை. சத்யாநகர், பெரியப்பாநகர், தெரசா காலனி உள்ளிட்ட இடங்களில் நீர் சப்ளை ஆகவில்லை.

கொடைக்கானல் கீழ்குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மஞ்சூர், தாண்டிக்குடி, மங்கலம்கொம்பு, பாச்சலூர் வழியாக பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும். மலைப்பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிடி ஸ்கேன் பயன்பாட்டிற்கு வர வேண்டும். ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும்’ என்றார். குழு உறுப்பினர்கள் சண்முகம், பாண்டியன், அன்பில்மகேஷ், பொய்யாமொழி, கோவி.செழியன், பிச்சாண்டி, நல்லதம்பி, வேடசந்தூர் எம்எல்ஏ.பரமசிவம், சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன், சிறப்புச் செயலாளர் வசந்திமலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Senthil Kumar MLA ,
× RELATED பழநி குதிரையாறு அணையில் பாசனத்துக்கு...