விருப்பாட்சியில் சுகாதார சீர்கேடு

ஒட்டன்சத்திரம், அக். 12: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சியில் 4500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம்-பழநி மெயின்ரோட்டில் உள்ள விருப்பாட்சியின் மையப்பகுதியான காளியம்மன்கோவில் வடக்குத் தெருவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், மார்க்கெட் தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு செல்லும் வழியில் ரோடு சேதமடைந்து, போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. மேலும் தெருவின் மையப்பகுதியில் குப்பைக் கழிவுகள், பிளாஸ்டிக்கழிவுகள், பன்றிகுடில்கள் அதிகளவில் சூழ்ந்தும், சாக்கடை வசதியும் சரிவர பராமரிக்கப்படாததால் ஒரே அசுத்தமாக இருப்பதால் தூர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதியின் உட்புறத்தையே சிலர் திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள மக்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அசுத்தங்களை சுத்தம் செய்து, மேலும் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: