×

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் புதர் மண்டிய வடமநேரியான் கால்வாயை சொந்த செலவில் சீரமைக்கும் விவசாயிகள்

களக்காடு, அக். 11:  களக்காடு அருகே புதர் மண்டிய வடமநேரியான் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் வடமநேரியான்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொதுப்பணித்துறையினருக்கு பாத்தியப்பட்ட இந்த குளத்திற்கு களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நெட்டேரியங்கால் பகுதியில் இருந்து சிதம்பரபுரம் வழியாக வரும் வடமநேரியான் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த கால்வாயும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வடமநேரியான் கால்வாய் பராமரிப்பின்றி தூர்ந்து காணப்பட்டது. கால்வாயில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காட்சி அளித்தது. பல இடங்களில் மண் மேடுகளும் ஏற்பட்டன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டதால் குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து விவசாயிகள் வடமநேரியான் கால்வாயை சீரமைத்து தருமாறு கடந்த 3 மாதங்களாக மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை
அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்து
வந்தனர். ஆனால் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது களக்காடு பகுதியில் மழை பெய்து வருவதால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ள நிலையில், வடமநேரியான் கால்வாயில் தண்ணீர் வராததால் குளம் நிரம்பாத நிலை நிலவியது.
இதனை தொடர்ந்து விவசாயிகள் தாங்களே சொந்த செலவில் கால்வாயை சீரமைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் 4 கிமீ தூரமுள்ள வடமநேரியான் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விவசாயி ராஜலிங்கம் கூறுகையில், ‘வடமநேரியான்குளத்தை நம்பி எங்கள் ஊரில் உள்ள 1000 பேர் பிழைத்து வருகிறோம். எங்கள் வாழ்வாதாரமே வடமநேரியான் குளம்தான். எனவே குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயை சீரமைக்குமாறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் நாங்களே செலவு செய்து கால்வாயை சீரமைத்து வருகிறோம்” என்றார்.

Tags :
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா