×

கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் திருவண்ணாமலை அருகே பரபரப்பு குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி

திருவண்ணாமலை, அக்.12: திருவண்ணாமலை அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி கிராம பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கிளிப்பட்டு ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிற்கு முறையான மின் இணைப்பு பெறாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில், முறையாக மின் இணைப்பு பெறாததால் மின் மோட்டார் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் பற்றாக்குறை நிலவி வந்ததாம்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் வந்த போது, இந்த ஆழ்துணை கிணற்றிற்கு முறையாக அனுமதி பெறாமல் மின் இணைப்பு பயன்படுத்தி வந்ததாக கூறி மின் இணைப்பு துண்டித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கிராம மக்கள் குடி நீருக்காக அலைமோதும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் கிளிப்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்த அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road ,Tiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...