×

மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி ஏராளமான பக்தர்கள் தரிசனம் அரசங்குப்பம் காசி விஸ்வநாதர் கோயிலில்

செய்யாறு, அக்.12: செய்யாறு அருகே அரசங்குப்பம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளியை பக்தர்கள் கண்டு வணங்கினார்கள்.செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அரசங்குப்பம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று மூலவர் காசி விஸ்வநாதர் மீது காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரம் சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது, சுவாமிக்கு சூரிய பகவான் அபிஷேகம் நிகழ்த்துவதாக கருதி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள்.அதன்படி இந்தாண்டு புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று சூரிய ஒளி விழவில்லை. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மூன்று நாட்கள் கடந்து நேற்று காலை 6,30 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுந்தது. சுமார் 5 நிமிடம் மட்டுமே இந்த நிகழ்வு நடந்தது. அப்போது, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. அப்போது கோயிலில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : devotees ,Shiva ,Kasi Vishwanath Temple ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு