×

₹60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரக அலுவலர் கைது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ஆக்கிரமிப்பு நிலம் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க

வேலூர், அக்.12: ஆக்கிரமிப்பு நிலம் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக விவசாயியிடம் ₹60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.வேலூர் மாவட்டம், அமிர்தி அடுத்த தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம்(33), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அமிர்தி வனச்சரகத்தையொட்டி அமைந்துள்ளது. சிதம்பரத்தின் தந்தை ராமன், வனப்பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கடந்த 8ம் தேதி அமிர்தி வனச்சரக அலுவலர் ராஜா அழைத்து விசாரணை நடத்தினார்.அப்போது வனப்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்போவதாகவும், வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் ₹1.5 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்றும் ராமனிடம், ராஜா கேட்டுள்ளார்.

அதற்கு ராமன், ‘என்னிடம் அளவு பணம் இல்லை. ₹60 ஆயிரம் தருகிறேன்’ என்றாராம். இதை ராஜா ஏற்றுக்கொண்டாராம். இதுகுறித்து ராமன் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ₹60 ஆயிரத்துடன், ராமன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அமிர்தி வனச்சரக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வனச்சரக அலுவலர் ராஜாவிடம், ₹60 ஆயிரத்தை கொடுத்தார்.

பணத்தை ராஜா வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி மற்றும் போலீசார், ராஜாவை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து விடிய, விடிய அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு விசாரணை முடிந்த நிலையில் வனச்சரக அலுவலர் ராஜாவை கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.வனப்பகுதியை ஆக்கிரமித்தவரிடம் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கிய வழக்கில், வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Forest Officer ,Vellore Bribery Prevention Police ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில்...