கொட்டித்தீர்த்த கனமழை இடைப்பாடியில் 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்

இடைப்பாடி, அக். 11: இடைப்பாடியில் கடந்த திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால், பூலாம்பட்டியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. சேலம் மாவட்டம் முழுவதுமாககடந்த திங்கட்கிழமை அன்று கனமழை பெய்தது. இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, கூக்கல், குப்பனூர் மூலப்பாறை, நாவிதன்குட்டை, செட்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துகொண்டது. ஏரிகளில் நீர் நிரம்பியது. மேலும், கிராமங்களில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் மூழ்கியது. பூலாம்பட்டியில் கார்த்திகேயன், முருகன் ஆகியோர் நிலத்தில் பயிரிட்டு 37 நாட்கள் வளர்ந்த நிலையில் இருந்த நெற்பயிர் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பூலாம்பட்டி வந்த வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டனர். அவர்களிடம் அரசின் இழப்பீடு பெற்றுத்தரும் படி, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தாரமங்கலம்: தாரமங்கலம் பெரிய மாரியம்மன் கோயில் அருகே, பழைய கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ேபாதிய பராமரிப்பு இல்லாததால் இந்த கட்டடத்தில் சுவர்களில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று தாரமங்கலம் பகுதியில் கனமழை பெய்தது.அப்ேபாது சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது. தவிர, சுவர்களின் விரிசல் வழியாக கொட்டிய தண்ணீரால், உள்ளே இருந்த ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தது. நேற்று காலை அலுவலகம் வந்தவர்கள், நனைந்த ஆவணங்களை அப்புறப்படுத்தி வேறு இடத்துக்கு கொண்டு சென்று காயவைத்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தாரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு தனியாக கட்டடம் கட்ட 13 சென்ட் நிலம் வழங்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் நிலம் ஊர் எல்லையில் உள்ளதால், பத்திரபதிவுக்கு வரும் மக்களின் பணத்துக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி, கட்டடம் கட்டப்படவில்லை. பழைய கட்டடத்தில் தொடர்ந்து அலுவலகம் செயல்பட்டு வருவதால், மழை காலங்களில் தண்ணீர் புகுந்து ஆவணங்கள் சேதமடைந்து வருகிறது என்றனர்.

Related Stories: