×

50 ஆண்டுக்கு பின் இன்று தேர்தல் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 9 பதவிகளுக்கு 32 பேர் போட்டி

நாமக்கல், அக்.11: நாமக்கல் மாவட்டம் மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொதுப்பிரிவில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளுக்கு, இன்று (11ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 9 பதவிக்கு 32 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கான வாக்கு பதிவு 17 மையங்களில் காலை 8மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. 33,097 விவசாயிகள் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலையில் அங்கத்தினராக உள்ள விவசாயிகள் நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ளனர். இந்த 3 மாவட்டம் 8 கோட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலுக்கான வாக்கு பதிவும் மோகனூர் கிழக்கு, மோகனூர் மேற்கு, பாலப்பட்டி, நாமக்கல், ராசிபுரம், தொட்டியம், தாத்தையங்கார் பேட்டை, ஆத்தூர் ஆகிய 8 கோட்டங்களில் தனித்தனியாக நடைபெறுகிறது. அந்தந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அங்கேயே வாக்களிக்க வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் அளிக்க தனி கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

94899-00208 என்ற எண்ணில் விவசாயிகள் புகார் அளிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி தெரிவித்துள்ளார். மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த 1962ம் ஆண்டு துவங்கப்பட்டது முதல், சர்க்கரை ஆரைக்கு நிர்வாகிகளை அரசாங்கமே நேரடியாக நியமனம் செய்து வந்தது. கூட்டுறவு சங்கத்தின் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுக்கு முன் ஆலை நிர்வாகத்தில் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தேர்தல் மூலம் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த 3 ஆண்டுக்கு முன் நடைபெற்ற தேர்தலில், ஆளுங்கட்சியான அதிமுகவின் உத்தரவுப்படி தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டு, விவசாயிகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் செய்தனர். இதனால் அதிமுகவினர் விரும்பிய 17 பேர் நிர்வாக குழு உறுப்பினராக வரமுடிந்தது.
இந்த முறையும், அதே நிலையை மேற்கொள்ள அதிமுக முக்கிய புள்ளிகள் விரும்பினர். ஆனால் விவசாயிகள் கூட்டமைப்பு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்டோரை ஒரே நாளில் மனு தாக்கல் செய்யவைத்தது.

இதனால் வேறு வழியின்றி, நேற்று முன்தினம் விவசாயிகளுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து 85 பேர் மட்டுமே, தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். மீதமுள்ளவர்கள் மனுக்களை வாபஸ் பெறாததால் தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்து கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மூத்த உறுப்பினரும், கரும்பு பயிரிடுவோர் சங்க செயற்குழு உறுப்பினருமான வையாபுரி கூறுகையில், ‘மோகனூர் சர்க்கரை ஆலை, மத்திய அரசிடம் இருந்து பல விருதுகளை பெற்றுள்ளது. அரசாங்கம் அறிவிக்கும் பணத்தை, கரும்பு விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. பல போராட்டங்களை நடத்தி சர்க்கரை ஆலையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வந்தோம். சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது முதல் தற்போது தான் முதன் முறையாக தேர்தல் நடைபெறுகிறது,’ என்றார்,

Tags : Mohanur Cooperative Sugar Factory ,
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா