×

அரியலூர் அருகே பணம் கையாடல் செய்த வங்கி உதவியாளர் கைது

அரியலூர், அக்.11:  அரியலூர் அருகே விவசாயிகளின் பணத்தை கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்த வங்கி உதவியாளரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் பொய்யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அலுவலக உதவியாளராக பணியாற்றிய செந்தில்குமார் சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும்போது மோசடி செய்துள்ளதாக சரகத் துணைப்பதிவாளருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அரியலூர் சரகத் துணைப்பதிவாளர் சட்டப்பூர்வ விசாரணைக்கு உத்திரவிட்டார். விசாரணையில் செந்தில்குமார், சங்க உறுப்பினர்களுக்கு ஆலைக் கரும்பிற்கான கடன் வழங்கியமைக்கு சம்மந்தப்பட்ட கரும்பு ஆலைகளிலிருந்து உறுப்பினர்களது கடன் கணக்கிற்கு வரவு வந்த தொகையினை கடன் கணக்கில் வரவு வைக்காமல், சங்க உறுப்பினர்களது சேமிப்புக் கணக்கில் வரவு வைத்ததுபோல் பொய் கணக்கு எழுதி ரூ.2.48 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.

மேற்கூறிய முறைகேட்டிற்கு சங்க பொறுப்பு செயலாளராக பணியாற்றி வரும் சாமிநாதன் மற்றும் சங்கத்தின் சிற்றெழுத்தர் குருநாதன் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து பெரம்பலூர் வணிகக் குற்றப் புலனாய்வுப்பிரிவு போலீசாரிடம் கூட்டுறவுச் சங்கங்களின் சரகத் துணைப்பதிவாளர் செல்வராஜ் புகார் அளித்தார். வணிகக் குற்றப்புலனாய்வுப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை, தலைமைக்காவலர் சின்னத்துரை மற்றும் தேவக்குமார் உதவியுடன் கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி செந்தில்குமாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தலைமறைவாகி உள்ள சங்க பொறுப்பு செயலாளர் சாமிநாதன் மற்றும் சிற்றெழுத்தர் குருநாதன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : bank assistant ,Ariyalur ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...