தோல்வி பயத்தில்தான் அதிமுக இடைத்தேர்தலை நிறுத்தியுள்ளது

மதுரை, அக். 11: தோல்வி பயத்தில் தான் அதிமுக இடைத்தேர்தலை நிறுத்தியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் மதுரையில் கூறினார். மதுரை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறும்போது, “மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிரானது. தற்போது தமிழகத்தில் நடக்கும் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆட்சியை பின்னால்  இருந்து பாஜ இயக்குகிறது. அதிமுக அரசு ஊழல் அரசு. ஆளுனர்  பேசும்போது கூட  பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்ததை ஒத்துக்கொண்டார். நாம் ஊழலுக்கு எதிராக போராடுவோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. ஒவ்வொரு வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி தெரிவித்தார். யாருக்காவது அது கணக்கில் வந்துள்ளதா? மழையை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. காஷ்மீர் மற்றும் வடமாநிலங்களில் மழைக்காலங்களில் தேர்தல் நடந்துள்ளது. தீவிரவாதம் அதிகமுள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் கூட தேர்தல் நடந்துள்ளது. எனவே தோல்வி பயத்தில்தான் அதிமுக இந்த இடைத்தேர்தலை நிறுத்தியுள்ளது. இந்த ஆட்சியில்தான் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உச்சத்தை தொட்டுள்ளது” என்றார்.

  பொறுப்பாளர் சொர்ணா சேதுராமன், நிர்வாகிகள் அருள்பெத்தையா, ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.

Related Stories: