தொடர் மழை எதிரொலி மலையிலிருந்து உருண்ட பாறை

உசிலம்பட்டி, அக். 11: தொடர் மழை பெய்து வருவதால் உசிலம்பட்டி அருகேமலையிலிருந்து பாறை உருண்டு வந்து தடுப்பில் சிக்கி நின்றது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்தனர். தகவலறிந்த ஆர்.டி.ஓ மற்றும் பேரிடர் குழுவினர் பாறையை உடைத்து அகற்றினர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கல்லூத்து ஊராட்சிக்கு உட்பட்டது பெருமாள்பட்டி. இந்த கிராமத்தின் அருகில் உள்ள மலையிலிருந்து சில பாறைகள் சமீபத்தில் பெய்த தொடர்மழையின் காரணமாக சரிவு ஏற்பட்டு உருண்டு விழுந்தது. அதில் குடியிருப்பு பகுதிக்கு மேலே மலையிலிருந்து உருண்டு வந்த பெரிய பாறை ஒன்று தடுப்புகளில் சிக்கி ஆபத்தான நிலையில் கீழே விழும் நிலையில் நின்றது. இதனால் பெருமாள்பட்டி கிராம மக்கள் எப்போது பாறை உருண்டு விழுமோ என்ற பீதியில் இருந்தனர்.

தகவலறிந்த உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில், தாசில்தார் நவநீதகிருஷ்ணன், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் காராமணி, ஆகியோர் முன்னிலையில் பேரிடர் குழுவினர்கள் மூலம் அந்தப்பாறையை உடைத்து ஆபத்தில்லா நிலைமையை உருவாக்கி பொதுமக்களை அச்சத்திலிருந்து விடுவித்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: