×

திருவண்ணாமலை அருகே அங்கீகாரம் இல்லாத தனியார் இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளிக்கு ‘சீல்’

திருவண்ணாமலை, அக்.11: அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த தனியார் மெட்ரிக் பள்ளிக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் சீல் வைத்தார். மேலும், அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் காந்தி இன்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில், எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை 1,600 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இந்நிலையில், இப்பள்ளியில் முறையான கட்டமைப்பு வசதிகளும், அரசு அங்கிகாரமும் இல்லாமல் செயல்படுவதாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த புகாரின் பேரில், கடந்த 6ம் தேதி மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது, வகுப்பறைகளுக்கு கதவு, ஜன்னல்கள் எதுவும் இல்லாமல், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது தெரியவந்தது. மேலும், மூடப்பட்டாத கிணறு, பள்ளியை சுற்றிலும் முட்புதர் என பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதோடு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நடத்த அங்கீகாரம் பெறாமல் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்தது தெரியவந்தது. இதனால் பள்ளியின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, ‘சீல்’ வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், பள்ளி துணை ஆய்வாளர் குமார் ஆகியோர் கடந்த 3 நாட்களாக பள்ளியில் ஆய்வு நடத்தினர்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும், பெற்றோர்கள் விரும்பும் அருகில் உள்ள பள்ளிகளில் உடனடியாக சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் கடந்த மூன்று நாட்களில் முறையாக மாற்றுச்சான்றுகள் வழங்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், அங்கீகாரம் பெறாமல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த மாணவர்களின் கல்வியும் பாதிக்காதபடி, வேறு பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் ெதாடர்ந்து. அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட மங்கலம் காந்தி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளிக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் நேற்று சீல் வைத்தார்.

இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் கூறியதாவது: தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அங்கீகார அவகாசம் முடியும் 3 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, இப்பள்ளி அங்கீகாரம் கடந்த மே மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனாலும், அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை. முறையான அங்கீகாரம் இல்லாமல், மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசின் விதிமுறைகளின்படி பள்ளியில் கட்டமைப்பு வசதிகள் செய்யவில்லை. எனவே, இப்பள்ளிக்கு மாவட்ட நீதிபதி உத்தரவுபடி சீல் வைத்திருக்கிறோம். இங்கு படித்த மாணவர்கள் அனைவரும், அவர்களுடைய விருப்பத்துக்குரிய பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றார்.

Tags : school ,Tiruvannamalai ,Private International Metric ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...