×

செங்கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது

ெசங்கம், அக்.11: செங்கத்தில் விதவை சான்று வழங்க பெண்ணிடம் ₹2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(45), விவசாயி. இவரது மனைவி சாரதா. சாரதாவின் தம்பி சவுந்தர்(40). இவர் கடந்தாண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் சவுந்தர் மனைவி வெண்ணிலா(35) விதவை சான்று பெற செங்கம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்ததாக தெரிகிறது. இருப்பினும் சான்று பெற முடியவில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்திலும் இதுகுறித்து மனு அளித்தார். இருப்பினும் சான்று பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் என அனைத்து நிலைகளிலும் விசாரணை முடிந்த நிலையில், தாசில்தார் ரேணுகாவிடம் கோப்பு நிலுவையில் இருந்தது. அப்போது, வெண்ணிலாவிற்கு விதவை சான்று வழங்க தாசில்தாரிடம் கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.  அதற்கு, அவர் ₹2 ஆயிரம் பணம் கொடுத்தால் உடனே சான்று கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். பணம் கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சரவணகுமாரிடம் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து டிஎஸ்பி சரவணகுமார் தலைமையில் வேலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அருண்பிரசாந்த், ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று மதியம் செங்கம் தாலுகா அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்தனுப்பிய ₹2 ஆயிரம் நோட்டை தாசில்தார் ரேணுகாவிடம் கோபாலகிருஷ்ணன் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து சுமார் 6 மணி நேரம் விசாரணைக்கு பின் தாசில்தார் ரேணுகாவை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர். பெண் தாசில்தார் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் செங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tiljidar ,
× RELATED பத்தாம் வகுப்பு தேர்வில் 86.10 சதவீத...