×

குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவிகள் உறுதிமொழி: கலெக்டர் உத்தரவு

வேலூர், அக். 11: வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வாரத்தின் முதல் நாளன்று குழந்தை திருமணம் தடைச்சட்டம், பாலியல் துண்புறுத்தல் குறித்து மாணவிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடந்தன. இதை தடுக்கும் வகையில், கடந்த 2006ம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே சமயத்தில் பல குழந்தை திருமணங்கள் நடக்கும் பட்சத்தில் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அக்குழந்தை திருமணங்களை தடுக்கலாம். ஆனாலும் இதுவரையில் குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க முடியவில்லை. ஆங்காங்கே குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 63க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலெக்டர் ராமன் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: வேலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளிடையே குழந்தை திருமண தடைச்சட்டம், பாலியல் துன்புறுத்தல், வன்ெகாடுமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

குழந்தை திருமணம் இன்றும் பொது நிகழ்வாகவே கருதப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே அனைத்து பள்ளிகளிலும் வாரந்தோறும் முதல் வேலை நாள் காலை கூட்டத்தில் குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sexual Harassment ,
× RELATED சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கைதானவர் மீது குண்டர் சட்டம்