×

வாடகைக்கு வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை ஓட்டுனர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

திருவண்ணாமலை, அக்.10: சொந்த வாகனத்தை வாடகைக்கு இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வந்தவாசி அனைத்து ஓட்டுனர்கள் நலச் சங்கத்தினர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் நேற்று மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர அனைத்து டூரிஸ்ட், கார், வேன் ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் 20க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். தொடர்ந்து, கலெக்டர் ேக.எஸ்.கந்தசாமியை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வந்தவாசி நகரத்தில் அனைத்து டூரிஸ்ட், கார், வேன் ஓட்டுனர் நலச் சங்கம் அமைத்து நாங்கள் வாகனங்களை முறையாக இயக்கி வருகிறோம். இந்த பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய கார் உள்ளிட்ட வாகனங்களை சொந்த பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள நாட்களில் வாடகைக்கு இயக்கி வருகின்றனர்.

இதனால் சுற்றுலா வாகனம் வைத்திருக்கும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நாங்கள் அரசுக்கு வரி மற்றும் வாகன புதுப்பித்தல் ஆகியவைகளை தவறாமல் செய்து வருகிறோம். ஆனால் சொந்த பயன்பாட்டிற்கு வாகனம் வைத்திருப்பவர்கள் அரசுக்கு எந்த வரியும் செலுத்தாமல் வாடகைக்கு இயக்குகின்றனர்.  இதனால் எங்களது தொழில் முற்றிலும் பாதிக்கப்படுவதால் நாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே புகார் மனு அடிப்படையில் வந்தவாசி நகரத்தில் சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் வாகனங்களை வாடகைக்கு இயக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலரிடம் இதுகுறித்த கோரிக்கை மனுவை அளிக்க சென்றனர்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...