காது ஆரோக்கியத்துக்கு செவி கொடுப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அந்த சிரசில் பிரதானமானவற்றில் ஒன்று (அதாவது இரண்டு) காதுகள். காதுகளைக் காப்பது நம் செவித்திறனைக் காத்து நம்மை ஆரோக்கியமாகவும் செயலூக்கமாகவும் வைத்திருக்கும்.

காதின் பகுதிகள்

வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று காதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். காது மடல், துவாரக்குழாய் சேர்ந்த இடம், வெளிக்காது நடுக்காது என்பது காது திரையின் உள்ளேயிருக்கும் வெற்றிடத்தைக் குறிக்கும். அதில் மூன்று சிறிய எலும்புகள் இருக்கும். அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கும். உள்காதில் நத்தை வடிவில் `காக்லியா’ (Cochlea) என்ற உறுப்பு இருக்கும். அதில் சிறு சிறு நரம்புகள் இருக்கும். அந்தச் சிறிய நரம்புகள் இணைந்து, பெரிய நரம்பாகி, மூளையைச் சென்றடையும்.

ஒலியைக் காது மடல் உள்வாங்கி, துவாரத்தின் வழியாக உள்ளே அனுப்பி காதின் திரையிலுள்ள எலும்புகளில் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வு உள்காதுக்குள் சென்று, அங்குள்ள திரவத்தில் அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வுகள் அங்குள்ள நரம்புகளில் பிரதிபலிக்கும். இதையடுத்து அங்கு சிறிதாக ஒரு மின்னோட்டம் ஏற்பட்டு, ஒலியாக மாற்றமடைந்து மூளையைச் சென்றடையும்.

குழந்தை பிறந்தவுடன், அதற்கு நன்றாகக் காது கேட்க வேண்டும். அதாவது, குழந்தையின் காதின் வழியாக ஒலி உள்ளே சென்று, மூளையிலுள்ள செவிப் பகுதியைத் தூண்ட வேண்டும். அப்படிச் செய்தால்தான், காது கேட்கும் திறன் ஏற்படும்.காது வழியாக உள்ளே செல்லும் ஒலி, மூளையிலுள்ள செவிப்பகுதியைத் தூண்டிய பிறகே குழந்தைக்குப் பேச்சுத்திறன் வரும். ஏனென்றால், மூளையில் ஒலியை உள்வாங்கும் இடமும் பேச்சை வெளிப்படுத்தும் இடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். காதின் உள்ளே ஒலி செல்லவில்லையென்றால், குழந்தையால் பேச முடியாது. ஆக, ஒருவருக்குப் பேச்சும் மொழியும் வர முதல் காரணம் செவித்திறனே!

காது கேளாமை

காது கேளாமையில் பல வகைகள் உள்ளன. குறிப்பாக, `கண்டக்டிவ் ஹியரிங் லாஸ்’ (Conductive Hearing Loss). வெளிக்காதில் உள்ள துவாரத்தில் அடைப்பு அல்லது நோய்த்தொற்று இருந்தாலோ, காது ஜவ்வில் ஓட்டை விழுந்திருந்தாலோ, காது திரையிலுள்ள சிறிய எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, மெழுகு அடைத்துக்கொண்டிருந்தாலோ, சரும உறை கட்டியால் (Cholesteatoma) பாதிக்கப்பட்டாலோ அதை `கண்டக்டிவ் ஹியரிங் ஸாஸ்’ என்கிறார்கள். அதாவது, ஒலியானது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லும்போது ஏற்படும் தடை என்று இதைச் சொல்லலாம்.

அடுத்தது, நரம்பு சம்பந்தப்பட்ட காது கேளாமை. இது, உள்காதில் வரக்கூடிய பிரச்னை. சிறு சிறு நரம்புகள் இணைந்து, பெரிய நரம்பாகிக் காதுக்குள் செல்லும்போது அந்த நரம்புகளில் ஏற்படும் பிரச்னையை `நரம்பு தொடர்பான காதுகேளாமை’ (Sensorineural Hearing Loss) என்கிறோம். இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், கண்டக்டிவ் ஹியரிங் லாஸை நாம் குணப்படுத்த முடியும்.

காது ஜவ்வில் ஓட்டை இருக்கிறது என்றால், அதை அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யலாம். சிறு சிறு எலும்புகள், சரும உறை கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றை அகற்றிவிட்டு, செயற்கை எலும்புகள் பொருத்தி குணப்படுத்தலாம். காதில் மெழுகு இருந்தால் அதை அகற்றி, சரிசெய்யலாம்.

நரம்பு சம்பந்தப்பட்ட காது கேளாமை ஏற்பட்டால், பெரும்பாலான நேரங்களில் நிரந்தரமான காது கேளாமை உண்டாக வாய்ப்பிருக்கிறது. இது குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது திடீரென்றோ, கொஞ்சம் கொஞ்சமாகவோ எப்படி வேண்டுமானாலும் ஏற்படும். `சடன் ஹியரிங் லாஸ்’ (Sudden Hearing Loss) எனப்படும் திடீர் காது கேளாமையை ஒருவிதமான `இன்னர் இயர் ஸ்ட்ரோக்’ (Inner Ear Stroke) என்றும் குறிப்பிடலாம். திடீர் காது கேளாமைப் பிரச்னைக்கு உடனடியாக மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்றால் செவித்திறனை திரும்பப் பெற வாய்ப்பிருக்கிறது.

காது கேளாமைக்குக் காரணம் என்ன?

மரபணுக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு இரண்டுமே காது கேளாமைக்குக் காரணங்கள் என்று சொல்லலாம். மரபணுக் கோளாறால் சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே காது கேளாமை பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவற்றை மரபணுப் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். சிலருக்கு மரபணுப் பிரச்னைகள் இருந்தாலும், அவை வெளிப்படாமல் இருக்கும். ஆனால், வேறொரு நோய்க்கு மருந்து உட்கொள்ளும்போதோ அல்லது சுற்றுச்சூழல் ஒலி மாசு (Noise Pollution) காரணமாகவோ, அதிகச் சத்தத்தால் ஏற்படும் காது நரம்பு பாதிப்பாலோ, மரபணுக் குறைபாட்டாலோ சம்பந்தப்பட்டவருக்கு நிரந்தரமான காது கேளாமை ஏற்படலாம்.

தொற்றுநோய்கள்

சளி மற்றும் சைனஸ் பிரச்னைகளால் குழந்தைகளுக்கு காதில் வைரஸ் தொற்று உருவாகலாம். மூக்கு மற்றும் சைனஸ் பகுதியில் ஏற்படும் தொற்று, காதையும் மூக்கையும் இணைக்கும் `யுஸ்டேஷன்’ (Eustachin) குழாயின் வழியாகச் சென்று, நடுக்காதில் தொற்றுநோய்களை உருவாக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு காதுவலி, சீழ் வடிதல் போன்றவை ஏற்படும். இது பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படலாம். பெரியவர்களுக்கும் இது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வெளிக்காதில் பூஞ்சைக் காளான் தொற்று காரணமாக `ஃபங்கல் இன்ஃபெக்சன்’ (Fungal Infection) ஏற்படலாம். அசுத்தமான நீர் காதின் உள்ளே போவதும், பட்ஸ்வைத்து காதைச் சுத்தம் செய்வதுமே இதற்கான காரணங்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்குக் காதில் தொற்றுகள் ஏற்படும். சர்க்கரைநோய் பாதிக்காதவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இடையே தொற்றுநோயில் வேறுபாடுகள் உண்டு. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்குத் தொற்று ஏற்பட்டால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதுக்கும் மூளைக்கும் இடையேயுள்ள எலும்பில் தொற்று (Skull Base Osteomyelitis) ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எனவே, இவர்கள் மருத்துவரை உடனே அணுகி, சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

சீழ் வடிதல் ஏன்?

சீழ் வடிதல் என்பது வெளிக்காது மற்றும் நடுக்காது பாதிக்கப்படுவதால் வரலாம். நடுக்காது சீழ் வடிதலில் இரண்டு வகைகள் உள்ளன. `சேஃப்’ (Safe),`அன்சேஃப்’ (Unsafe). சேஃப் என்பதில் காதைச் சுத்தம் செய்வதாலோ, காது திரையில் ஓட்டை விழுவதாலோ, நடுக்காதில் தொற்று ஏற்படுவதாலோ, அடிபடுவதாலோ (பளாரென காதில் அறைவதால்கூட) காது திரையில் ஓட்டை ஏற்படலாம்.

சரும உறை கட்டியால், காதின் சுவர் எலும்புகள் மற்றும் மூன்று சிறிய எலும்புகள் பாதிப்படையும்போது சீழ் வரலாம். இதனால் காதுக்கும் மூளைக்கும் நடுவே உள்ள எலும்பு பாதிக்கப்பட்டு, மூளையில் பாதிப்பை ஏற்படுத்தினால் அதை `அன்சேஃப்’ என்கிறோம். இந்த நிலையில், நாற்றத்துடன் குறைந்த அளவில் சீழ் வெளியேறும். சில நேரங்களில் ரத்தம் கலந்தும் சீழ் வடிய வாய்ப்பிருக்கிறது. எனவே, மருத்துவரை அணுகி, உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காது பிரச்னைக்கான அறிகுறிகள், பரிசோதனைகள்

காதில் அடைப்பு ஏற்படும்போதுதான், ஒருவருக்குக் காதில் பிரச்னை இருப்பது தெரியவரும். காது அடைப்பு, காதுவலி, காதில் சீழ் வடிதல், காதில் ரீங்காரச் சத்தம் போன்றவை காதில் ஏற்படும் பிரச்னையின் அறிகுறிகள். செவித்திறன் குறைந்தவர்கள் சத்தமாகப் பேசுவார்கள். சத்தம் அதிகமாக இருக்கும் பொது இடங்களில், காது கேட்பதில் அவர்களுக்கு சிரமம் இருக்கும். `என்ன பேசினீர்கள்?’ என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்பார்கள். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகலாம். முதியோர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, `ஆடியோமெட்ரி’ பரிசோதனை செய்ய வேண்டும். அதன் மூலம் எந்த வகையான பிரச்னை என்று கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையளிக்க வேண்டும்.

சிலருக்குக் காதில் `கொய்ய்ங்ங்ங்...’ என்ற ரீங்காரச் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்கும். இதை `டைனிட்டஸ்’ (Tinnitus)என்று குறிப்பிடுவோம். இதில் அதிக பாதிப்படைபவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகி தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். இவர்கள் உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.அதேபோல, தலைச்சுற்றலும்கூட காதுடன் சம்பந்தப்பட்டது என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. தலைச்சுற்றல் தனியாகவோ அல்லது காது கேளாமை, காது அடைத்துக்கொள்வது, வாந்தி, ரீங்காரச் சத்தம் உள்ளிட்ட மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்தோ ஏற்படலாம். இதற்கென இருக்கும் சிறப்புப் பரிசோதனைகளைச் செய்து பிரச்னைகளை சரிசெய்து கொள்ளலாம்.

காக்லியர் இம்ப்ளான்ட்

`காக்லியர் இம்ப்ளான்ட்’(Cochlear Implant) எனப்படும் அறுவைசிகிச்சை, நரம்பு தொடர்பான காது கேளாமைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும். இந்தக் கருவியை செவித்திறன் இழந்த ஒரு வயதுக்கும் அதிகமான குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொருத்திக் கொள்ளலாம். ஒரு காதில் மட்டும் நரம்பு தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கும் இதைப் பொருத்தலாம். இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு செவித்திறன், பேச்சுத்திறன் கிடைக்கும். `காக்லியர் இம்ப்ளான்ட்’ மூலம் காது கேட்காமல் தடுமாறும் முதியோருக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

தொகுப்பு : சரஸ்

Related Stories: