×

அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

அரியலூர்,அக்.9 : அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், காமரசவல்லி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை கலெக்டர் விஜயலட்சுமி, தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், அரியலூர் மாவட்டத்தில் நடப்பு காரிப் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டம் 2018-2019 பருவத்தில் அரியலூர் வட்டத்தில் ஏலாக்குறிச்சி, திருமழப்பாடி, காமரசவல்லி மற்றும் உடையார்பாளையம் வட்டத்தில் தா.பழூர் ஆகிய ஊர்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1840ம், பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1800ம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு காரிப் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டம் 2017-2018 பருவத்தில் 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் 4304 விவசாயிகளிடமிருந்து 16124 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், இதற்கான தொகை ரூ.27 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே, நெல் கொள்முதல் நிலையங்களை அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்) உமாமகேஸ்வரி  வரவேற்புரையாற்றினார். முடிவில், உதவி இயக்குநர் (வேளாண்மை) கண்ணன்   நன்றி கூறினார்.

Tags : paddy procurement center ,village ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...