×

இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ம் தேதி வெளியீடு அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூர்,அக். 9:அரியலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 2019 ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியநாகலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாமை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. அதற்காக 1.1.2019 அன்று வரை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. வரும் 13ம் தேதி வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவை அந்தந்த கிராம சபைகளில் படித்து பெயர்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. வரும் 14ம் தேதி அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும்.
எனவே 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் சிறப்பு முகாமில் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.அரியலூர் ஆர்டிஓ சத்தியநாராயணன், தாசில்தார் முத்துலட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Ariyalur ,
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...