×

மரம் விழுந்து ஆட்டோ டிரைவர் பலி ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு எருமாடு பஜாரில் கடையடைப்பு

பந்தலூர்,அக்.5: பந்தலூர் அருகே சரக்கு ஆட்டோ மீது மரம் விழந்து டிரைவர் பலியானார். அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி எருமாடு பஜாரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் சரக்கு ஆட்டோ மீது மரம் விழுந்தில் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் அபுட்டி(55) என்பவர் நேற்று முன்தினம் பலியானார். இதையடுத்து ஆட்டோ டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி எருமாடு பஜாரில் நேற்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

தொடர்ந்து அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து எருமாடு போலீஸ் ஸ்டேஷனில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.  பந்தலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி, பந்தலூர் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், சேரம்பாடி ரேஞ்சர் மனோகரன், பறக்கும்படை ரேஞ்சர் கணேசன் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். ஆபத்தான நிலையில் சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களை அகற்றவேண்டும் என கோரிக்கைகள் முன்வைத்தனர்.  அப்போது அதிகாரிகள் கூறுகையில், தற்போது அரசு வழங்கும் பேரிடர் நிவாரணம் இழப்பீடாக ரூ.4 லட்சம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பது, சாலையோரம்  உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது, வீட்டில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வது, என உறுதியளித்தனர். அதன் பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.   ஆர்பாட்டத்தில் வியாபாரிகள் சங்க நிவாகிகள்,மற்றும் அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பொதுநல அமைபை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு