×

கல்லட்டி மலைப்பாதையில் கடந்த 5 ஆண்டில் 77 விபத்து

ஊட்டி,அக்.5:  ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் மட்டும் கடந்த 2014ம் ஆண்டு முதல்  இதுவரை 5 ஆண்டில் நடந்த 77 விபத்துக்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 168  பேர் காயமடைந்துள்ளனர்.
 நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால்,  அனைத்து சாலைகளுமே செங்குத்தான மலைப்பாதைகளின் வழியாக அமைக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக, ஊட்டியில் இருந்து தலைகுந்தா, கல்லட்டி வழியாக மசினகுடி  செல்லும் பாதையே மிகவும் செங்குத்தான மலையில் அமைக்கப்பட்டுள்ளது. பூமி  மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இச்சாலையில் 36 கொண்டை ஊசி  வளைவு உள்ளன. இதில், 34, 35 மற்றும் ஆகிய மூன்று வளைவுகளே மிகவும்  ஆபத்தானது.வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டுநர்கள் இந்த பாதையின் ஆபத்தை  அறியாமல் தலைகுந்தாவில் இருந்தே வேகமாக ஓட்டி வருகின்றனர்.

 இதனால், கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் சாலையோரங்களில் உள்ள பெரிய பள்ளங்களில் விழுந்து விபத்து  ஏற்படுகிறது. இச்சாலையில்  அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. பெரும்பாலான விபத்துக்களில் வெளி மாநில  சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளே சிக்குகின்றனர். இதனை  தவிர்க்க பல எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக வாகனங்கள்  இயக்க அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும், உள்ளூர் வாகனங்கள் தவிர வெளியூர்  வாகனங்களையும் போலீசார் அனுமதிப்பதில்லை. இருந்த போதிலும், போலீசாரின்  கண்ணில் மண்ணை தூவிவிட்டு செல்லும் பல சுற்றுலா பயணிகளே இந்த விபத்தில்  சிக்குகின்றனர். நேற்று முன்தினம் நடந்த விபத்து கூட இது போன்றே  ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த பாதையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 77  விபத்து நடந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இச்சாலையில் 17 விபத்து  ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.  2015ம் ஆண்டில் 29 விபத்துஏற்பட்டுள்ளது. 6 பேர் பலியாகியுள்ளனர். 65 பேர்  காயம் அடைந்துள்ளனர்.

 2016ம் ஆண்டில் நடந்த 21 விபத்துகளில் 9 பேர்  உயிரிழந்துள்ளனர். 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 2017ம் ஆண்டில் 15  விபத்துகளில், 3 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயம் அடைந்துள்ளனர். 2018ம்  ஆண்டில் தற்போது வரை (கடந்த 1ம் தேதி நிகழ்ந்த விபத்து வரை) 5 விபத்து  ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர்.    இந்த விபத்துகள் அனைத்தும் ஊட்டி புதுமந்து காவல்நிலையத்திற்கு  எல்லைக்குட்பட்டே நடந்துள்ளது. புதுமந்து காவல் நிலையம் சென்றாலே, காவல்  நிலையம் முன் இச்சாலையில் விபத்தில் சிக்கிய பல வகையான வாகனங்களை காண  முடியும்.  குப்பை போல், அங்கு அந்த வாகனங்களை குவித்து வைத்துள்ளனர். நேற்று மீட்கப்பட்ட வாகனத்தை கூட அங்கு தான் போட்டு வைத்துள்ளனர்.  தொடர்ந்து  இச்சாலையில் விபத்துக்கள் ஏற்பட்ட போதிலும், இதனை தடுக்க முடியாமல்  காவல்துறை திணறுகிறது. காரணம், பெரும்பாலான விபத்துக்கள் சுற்றுலா  பயணிகளின் கவன குறைவே. போலீசார் மற்றும் வனத்துறையினர் இப்பாதையின் ஆபத்தை  சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வகைகளில் அறிவுறுத்திய போதிலும், அதனை  கேட்காமல் செல்வதாலேயே இது போன்ற விபத்து ஏற்படுகிறது. இச்சாலையில்  தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க ஒரே வழி, இனி இச்சாலையில் வெளியூர்  வாகனங்களை அனுமதிக்காமல் இருப்பதே நல்லது.

Tags :
× RELATED ஊட்டியில் நேற்று மேக மூட்டம்