சரும முடிகள் நீக்க வேக்சிங் ட்ரிக்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலகட்டத்தில், சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்கி, வழுவழுப்பான பளபளப்பான சருமத்தை பெறவே, பெரும்பாலான இளம்பெண்கள் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் கையாளும் முறையே வேக்சிங் என்று சொல்லப்படுகிறது. இந்த வேக்சிங் செய்து கொள்வது என்பது தற்போது பிரபலமாகவும், மிக சாதாரணமாகவும் ஆகிவிட்டது. இதற்காகவே, தற்போது மார்க்கெட்டில் ப்ரீ வேக்சிங் மற்றும் போஸ்ட் வேக்சிங் என பல்வேறு வேக்சிங் கேர் தயாரிப்புகளும் வந்துவிட்டது.

உதாரணமாக, வேக்சிங் செய்வதற்கு முன் ஜெல்லை பயன்படுத்துவதும், வேக்சிங் செய்த பின் எண்ணெயை பயன்படுத்தி சருமத்தை மிருதுவாக மாற்றுவது என பல்வேறு பயன்பாடுகள் இவற்றின் மூலம் கிடைக்கின்றன. ஆனாலும் பலருக்கும் வேக்சிங் செய்து கொள்வது குறித்தும், வேக்சிங் செய்வதற்காக பயன்படுத்தும் இந்த ப்ரீ வேக்சிங் மற்றும் போஸ்ட் வேக்சிங் தயாரிப்புகள் பற்றியும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. எனவே இந்த வேக்சிங் முறையும் தயாரிப்புகளின் பயன்பாடு குறித்தும் பார்ப்போம்:

பொதுவாக பெரும்பாலானவர்கள், கை, கால்கள், அக்குள் முடிகளை நீக்க வேக்சிங் முறையை பயன்படுத்துகிறார்கள். அதையும் தாண்டி சிலர், முகத்தின் அழகை பராமரிக்க, முகத்தில் உள்ள முடியை அகற்றவும் வேக்சிங் முறையை பயன்படுத்துகிறார்கள். ஆனால், பலருக்கும் இதன் பக்க விளைவுகள் பற்றி தெரிவதில்லை. இது முக அழகை பளபளப்பாக காட்டினாலும், அதில் பலவித பாதிப்புகள் உள்ளன. ஏனென்றால், நம் முகத்தில் உள்ள தோல்தான் உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் பிரதிபலிக்கிறது. அத்துடன் முகம்தான் வெளியுலகில் அதிக தொடர்பையும் கொண்டிருக்கிறது. எனவே, முகத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

ஆனால் ஹார்மோன்கள் மாற்றம், ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்ற காரணிகளின் அடிப்படையில் பெண்களுக்கு முகத்தில் அதிக அளவில் முடி வளர்ந்து விடுகிறது. இவ்வாறு முகத்தில் முடி வளர்வது பலருக்கு பிடிப்பதில்லை. இதனால்தான் அவற்றை வேக்சிங் செய்து நீக்க நினைக்கிறார்கள். இருப்பினும், முகத்தில் உள்ள முடிகளை நீக்க வேக்சிங் செய்யும்போது, அவை, வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் கொப்புளங்கள், தோல் வெடிப்புகள், அலர்ஜி, அரிப்பு, ஒவ்வாமை எதிர்வினைகள், அதிக முடி வளர்ச்சி, தோலில் ரத்தப்போக்கு போன்ற பாதிப்புகளை உண்டாக்கக் கூடும். மேலும் இது முன்கூட்டியே முதுமை அடையவும் வழி செய்கிறது.

அதுமட்டுமில்லாமல், வேக்சிங் செய்வதால் ஒவ்வொரு முறையும் தோலின் ஒரு அடுக்கை அது கிழித்துவிட கூடும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வேக்சிங் செய்து வந்தால் காலப்போக்கில், சருமம் பாதிப்புக்குள்ளாகும். மேலும் வறண்ட அல்லது சென்சிடிவ் வகை சருமமாக இருந்தால், வேக்சிங் முறை அதன் சிராய்ப்பு தன்மையால் அந்த பிரச்னைகளை அதிகப்படுத்தும். எனவே, முகத்தில் உள்ள முடியை நீக்குவதற்காக, வேக்சிங் செய்வது சரியானதல்ல என்று தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், இது போன்று வேக்சிங் செய்வது சருமத்திற்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அதற்கு பதிலாக, மெல்லியதாக முகத்தில் முடி வளர்ந்திருந்தால், மெல்லிய ரேஸர் பிளேடைப் பயன்படுத்தலாம். ஒருவேளை முகத்தில் உள்ள முடி அடர்த்தியானதாக இருந்தால், லேசர் ப்ளீச்சிங்கை முயற்சி செய்யலாம் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்போது வேக்சிங் செய்ய பயன்படுத்தும் தயாரிப்புகள் குறித்து பார்ப்போம்:

ப்ரீ வேக்சிங் தயாரிப்புகள்

வேக்சிங் செய்யும் முன்பு பயன்படுத்தப்படும் தயாரிப்புகளையே, ப்ரீ வேக்சிங் தயாரிப்புகள் என்று  சொல்கிறோம். இவை, வேக்சிங் செய்வதற்கு முன்பு சருமத்தில் உள்ள மாசுகளையும் நுண்கிருமிகளையும், வியர்வை மற்றும் தூசுக்கள் ஆகியவற்றை நீக்குவதற்கு பயன்படுகிறது. இதனால் நோய் தொற்றுகள் எதுவும் ஏற்படாதபடி பாதுகாக்கிறது.மேலும், வேக்சிங் செய்வதற்கு ஏற்றவகையில், சருமம் மற்றும் முடியின் வேர்க்கால்களை தயார்படுத்துகிறது. இதன் காரணமாக வேக்சிங் செய்த பிறகு வழக்கமாக உண்டாகும் அரிப்பு, எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது. வேக்சிங் செய்யும்போது ஏற்படும் வலியை குறைக்கும் வேலையையும் இது செய்கிறது.

போஸ்ட் வேக்சிங்

வேக்சிங் செய்த பின்னர் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளையே போஸ்ட் வேக்சிங் தயாரிப்புகள் என்று சொல்கிறோம். இவை வேக்சிங் செய்த இடத்தை வழவழப்பாக்கி சருமத்தை புத்துணர்ச்சியோடு வைக்க உதவுகிறது. வேக்சிங் செய்த பிறகு சுருமத்தில் சில நுண் துகள்கள் ஒட்டி இருக்கக்கூடும். அவற்றை முழுமையாக சருமத்திலிருந்து நீக்குவதற்கு உதவுகிறது. இதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும் எந்தவித அரிப்பு, எரிச்சல் ஆகியவை இல்லாமலும் பளபளப்பாக காட்சியளிக்க உதவுகிறது.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related Stories: