×

ஒரு மாதம் முடிந்தது என்டிசி சம்பள பேச்சுவார்த்தை முடக்கம் தொழிலாளர் துறை தீர்வு காண முறையீடு

கோவை, அக்.5: என்டிசி தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தை ஒரு மாத கெடுவிற்குள் முடிக்காமல் முடங்கியுள்ளது. இதனால் மத்திய தொழிலாளர் துறை மண்டல கமிஷனர் தலையிட்டு தீர்வு காண எச்எம்எஸ் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய பஞ்சாலை கழகத்திற்குட்பட்ட கோவையில் 5 மில்கள் உட்பட தமிழகத்தில் 7 மில்கள் உள்ளது. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள், புதிய சம்பள ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி கடந்த ஜூலை 20ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை 20 நாட்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர் துறை கமிஷனர் முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், என்டிசி நிர்வாகமும், தொழிற்சங்கங்களும் ஒரு மாதத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படுத்தி கொள்ளலாம், என்று முடிவானதை தொடர்ந்து, வேலை நிறுத்தம் கடந்த 9ம் தேதி விலக்கி கொள்ளப்பட்டது.

இதையடுத்து சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த மாதம் 12ம் தேதியும், 19ம் தேதியும்  கோவையிலுள்ள என்டிசி தென் மண்டல அலுவலகத்தில் நடந்தது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த ஆண்டு வழங்கிய ரூ.1,650 ஒப்பந்த உயர்வு தொகையை அடிப்படையாக கொண்டு, இந்த ஆண்டு ரூ.4,500 வரை வழங்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தென் மண்டல என்டிசி அதிகாரிகள் ரூ.1,500 சம்பள உயர்வு மற்றும் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு சலுகை வழங்குவதாகவும், அதற்கு உடன்படாவிட்டால், மேற்கொண்டு பேச்சுவார்த்தையை டெல்லியிலுள்ள என்டிசி தலைமை அதிகாரிகளிடம் மேற்கொள்ளும்படி முடித்து கொண்டனர். அதற்கு பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறாமல் முடங்கியுள்ளது. தொழிற்சங்கங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றன.

இது குறித்து எச்எம்எஸ் தொழிற்சங்க தலைவர் ராஜாமணி கூறியதாவது: கூட்டுறவு மில்களில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தினசரி கூலி தொகையான ரூ.340ஐ, தமிழக அரசின் அரசாணைப்படி ரூ.421 ஆக உயர்த்தியுள்ளனர். அதன்படி என்டிசி மில்களில் உயர்த்தினால் கூட மாதம் ரூ.2,132 ஆகிறது. ஆனால், என்டிசி நிர்வாகம் ரூ.1,500ஐ தாண்டவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பேசி முடிக்க வேண்டிய கால அவகாசமும் முடிந்துள்ளது. இதனால் மத்திய தொழிலாளர் துறையின் மண்டல கமிஷனர் தலையிட்டு, தீர்வு காணும்படி கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு எச்எம்எஸ் தொழிற்சங்க தலைவர் ராஜாமணி கூறினார்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்