சத்தியமங்கலத்தில் சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேதமானதால் பாதிப்பு

சத்தியமங்கலம்,  அக்.5. சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.55 கோடி செலவில் பாதாள சாக்கடை  திட்டப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கென  நகராட்சிப்பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் குழிதோண்டி  குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது.

 சாலையில் தோண்டப்பட்ட குழிகள்  மூடப்பட்ட இடத்தில் மண்ணால் முடியும் சாலைகள் குண்டும்குழியுமாக  மாறிவிட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு  வந்தனர். சேதமடைந்த சாலைகளை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த சில  தினங்களாக மழை பெய்து வருவதால் சேறும் சகதியுமாக நடந்து செல்வதற்கு கூட  லாயக்கற்ற நிலையில் சாலைகள் மாறிவிட்டது.

 நேற்று காலை கோட்டுவீராம்பாளையம் பகுதியில்  உள்ள தனியார் பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றிச்சென்ற பள்ளி வாகனம் பாதாள  சாக்கடைக்காக தோண்டி மண்ணால் மூடப்பட்ட பகுதியில் சென்றபோது ஈரத்தன்மை  காரணமாக சக்கரம் சிக்கி நகரமுடியாமல் நின்றது. பின்னர் அப்பகுதி பொதுமக்கள்  உதவியுடன் வாகனம் மீட்கப்பட்டு பள்ளிக்கு சென்றது. பலமுறை  வலியுறுத்தியும் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் விரைவில் நகராட்சி  நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக சத்தி நகர்ப்பகுதி  பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: