×

ஜம்பை நல்லிபாளையம் ஏரியில் கிராவல் மண் கடத்தல்

பவானி, அக். 5: பவானி அருகே ஜம்பை பேரூராட்சி, நல்லிபாளையத்தில் சுமார் 4.94 ஹெக்டர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் டிராக்டர்கள் மற்றும் லாரிகள் மூலம் கிராவல் மண், எவ்வித அரசின் அனுமதியும் பெறாமலும், அரசு அதிகாரிகள் உத்தரவு இல்லாமலும் பல கோடி மதிப்பிலான கிராவல் மண் சுமார் 20 அடி ஆழத்துக்கு கீழே தோண்டி வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நல்லிபாளையம் ஏரியில் கிராவல் மண் கொள்ளை நடைபெற்று வருவதாக புகார் எழுந்தாலும், உரிய அனுமதி பெற்றே அள்ளப்பட்டு வருவதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், சமூக ஆர்வலர் நாகராஜ் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட தகவல்களை பவானி வட்டாட்சியர் அலுவலக, பொது தகவல் அலுவலர் அளித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. நல்லிபாளையம் ஏரியில் வண்டல் மண்ணோ, கிராவல் மண்ணோ அள்ளுவதற்கு கேட்டு எவ்வித விண்ணப்பங்களும் வரவில்லை. அதேபோன்று, மண் அள்ளுவதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. நல்லிபாளையம் ஏரியில் தூர்வாரும் பணிகளக்காக அனுமதிக்கப்பட்ட பரப்பளவு, நீள, அகலம், ஆழம், அதன் வரைபட நகல்கள்,

எத்தனை கனமீட்டர் அளவுக்கு மண் அள்ளப்பட்டது குறித்த கேள்விக்கு, கிராவல் மண் அள்ள அனுமதி வழங்கப்படாததால் இதுகுறித்த எவ்வித பதிவும் இல்லை எனவும், மனுதாரர் யூகத்தின் அடிப்படையில் தகவல் கேட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது தகவல் அலுவலர் அளித்த தகவலின் நல்லிபாளையம் ஏரியில் மண் அள்ள அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஏரியில் 4.94 ஹெக்டேர் பரப்பளவில், அரசின் அனுமதி இல்லாமல் கிராவல் மண்ணை வெட்டி எடுத்து, விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிராவல் மண் வெட்டி எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர், டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக்  கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு