திம்பம் மலைப்பாதையில் விபத்துக்களை தடுக்க குழு

ஈரோடு, அக். 5:  திம்பம் மலைப்பாதையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்டது.சத்தியமங்கலத்தையும் கர்நாடக மாநிலத்தையும் இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பண்ணாரியில் இருந்து திம்பம் செல்ல 27 கொண்டை ஊசி வளைவு உள்ளது. இந்த கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலாக இருப்பதால் அதிக பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன. இதனால் இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல மணி நேரம் முடங்கி விடுவது வாடிக்கையாக உள்ளது.

 இது தொடர்பாக தமிழக, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கூட்டம் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அப்போது, அதிக பாரம் கொண்ட லாரிகளை மலைமேல் செல்ல தடை விதிப்பது, மாற்றுப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மலைப்பகுதியில் மாற்றுப்பாதை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல் உள்ளதால் அதிக பாரம் கொண்ட லாரிகளை அனுமதிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக பண்ணாரியிலும், சாம்ராஜ் நகரிலும் எடை மேடை அமைத்து குறிப்பிட்ட பாரத்திற்கு மேல் ஏற்றிச்செல்லும் வாகனங்களை அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில்,தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், இந்த குழுவின் பரிந்துரைபடி விரைவில் எடைமேடை அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் கூறுகையில், திம்பம் மலைப்பாதையில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது.எந்தெந்த பகுதியில் எடை மேடை அமைப்பது, எவ்வளவு எடைக்கு குறைவான வாகனங்களை அனுமதிப்பது, எத்தனை சக்கர வாகனங்களை அனுமதிக்கலாம் என்பன போன்றவற்றை இந்த குழு முடிவு செய்யும் என்றார்.

Related Stories: