×

செல்போனை பறித்த 3 சிறுவர்கள் கைது

ஈரோடு, அக். 5: ஈரோட்டில் சாலையில் நடந்து சென்ற வாலிபரை வழிமறித்து மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறித்த 3 சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். ஈரோடு மோசிகீரனார் வீதி நேரு காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அனுமான் (30). இவர் சம்பவத்தன்று இரவு பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது புதுமஜீத் வீதி அருகே பைக்கில் வந்த 3 சிறுவர்கள் அனுமானை வழிமறித்துள்ளனர். பின்னர் அவரிடம் மது குடிக்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 சிறுவர்களும் அனுமானை தாக்கி விட்டு அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அனுமான் சத்தம் போட்டு–்ள்ளார். ஆனால் அதற்குள் அந்த 3 சிறுவர்களும் அங்கிருந்து பைக்கில் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அந்த சிறுவர்களின் அடையாளம் தெரிய வந்தது. அந்த சிறுவர்கள் ஈரோட்டில் உள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தவர்கள் எனத் தெரிந்தது.  நேற்று முன்தினம் ஈரோடு, சத்தி, சோலார் ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு