×

கடைமடைக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை

திருப்பூர், செப். 26:  பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன கால்வாய் திட்டம் மூலம் உடுமலை, செஞ்சேரிமலை, ஜல்லிப்பட்டி, பல்லடம், மேட்டுக்கடை, பொங்கலுார், இடுவம்பாளையம்,  காங்கயம், வெள்ளக்கோவில், முத்துார்  வழியாக காவிரி ஆற்றில் தண்ணீர் கலக்கிறது. கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேரடியாக 3.75 லட்சம் ஏக்கரும், மறைமுகமாக 1.50 லட்சம் ஏக்கர்  விவசாய விளைநிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
 தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பருவமழை முறையாக பெய்த போது பிஏபி, பாசன விவசாயிகள் மூன்று போக சாகுபடி செய்தனர். சமீபத்தில் பருவமழை பொய்த்துப்போய் விவசாயம் பட்டுபோனது.  இந்நிலையில்,  பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் மெயின் வாய்க்காலிருந்து கிளை வாய்க்கால் மூலம் உட்பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதற்காக 200 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய தடுப்பணைகள் அமைத்து இரும்பு ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுப்பணித்துறை மூலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை துருப்பிடிக்காமல் இருக்க பெயிண்ட் பூசி, ஸ்குரு ராடுகளுக்கு கிரீஸ் தடவி இலகுவாக வைத்திருக்கவேண்டும்.
 இதற்காக தமிழக அரசு பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியை கொண்டு மராமத்து பணிகள் செய்ய வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை செய்வதில்லை. இதனால், ஷட்டர்கள் பழுதாகி ஓட்டை விழுந்து தண்ணீர் செல்கிறது. இதுதவிர, கிளை வாய்க்காலில்  முட்செடிகள் வளர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை. இதனால் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இன்றி கடைமடை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இதனால், அப்பகுதி விவசாயிகள் முன்னிலையில் பணிகள் செய்வது குறித்து திட்டத்தின் செயல்பாடுகளை தெரியப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன கால்வாய் விவசாயிகள் கூறியதாவது: பொதுப்பணித்துறைக்கு ஆண்டுதோறும் மராமத்து பணிகளுக்காக பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியில் இருந்து  எந்த பகுதிகளுக்கு பணிகள் செய்கிறோம் என்ற திட்டத்தின் முழுவிபரங்களை தெரியப்படுத்த வேண்டும். சட்டர்கள் பழுது, கிளை வாய்க்கால் அடைப்பு, தண்ணீர் பற்றாக்குறை குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும். அதன் அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடுகளை தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி