நிதியுதவி அளிப்போருக்கு சான்றிதழ்

புதுச்சேரி, செப். 26:   பாசன கால்வாய்கள் தூர்வாருவதற்கு நிதியுதவி மற்றும் இயந்திரங்கள் கொடுப்போருக்கு கவர்னர் மாளிகை பாராட்டு சான்றிதழ் வழங்கும் என கிரண்பேடி தெரிவித்துள்ளார். தூய்மையே சேவை இயக்கம் மற்றும் நீர்வளம் மிகுந்த புதுச்சேரி என்ற திட்டத்தின் கீழ் 26 பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணியை கவர்னர் கிரண்பேடி துவக்கியுள்ளார். இதன் மூலம் 64 ஏரிகளுக்கும், 100க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீரை நிரப்புவதற்கு பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சொர்ணாவூர் அணைக்கட்டு பகுதியை கவர்னர் கடந்த சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தார்.

அணைக்கட்டில்  இருந்து ஏரிகளுக்கு நீரை கொண்டு செல்லும் 13 கிலோ மீட்டர் நீளமுள்ள பங்காரு வாய்க்கால் மற்றும் 7 கிலோ மீட்டர் நீளமுள்ள சித்தேரி வாய்க்கால்களில் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடப்பதை கண்டு அதிருப்தியடைந்தார்.உடனடியாக கொம்யூன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து தூர்வார உத்தரவிட்டார். இரண்டு முறை ஆய்வுக்கு பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பினார். துணை நிலை ஆளுநராக நான் என்னதான் செய்ய வேண்டும்? எதற்காக நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்கள் என அதிகாரிகளை கடிந்து கொண்டார். அப்போது பட்ஜெட்டில் கால்வாயை தூர்வாருவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. பணம் இல்லாமல் எப்படி வேலையை துவங்குவது. இதற்காக புதிதாக டெண்டர் விட வேண்டும். ஏற்கனவே செய்த வேலைகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில்பணிகளை மேற்கொள்ள யாரும் முன்வரவில்லை என தெரிவித்தனர். நிதிக்கு தான் ஏற்பாடு செய்வதாக கவர்னர் தெரிவித்தார். அரசை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தூர்வாரும் திட்டத்துக்கு ஆட்சியாளர்கள் நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் நிதி வழங்குமாறு கவர்னர் மாளிகை கோரிக்கை விடுத்துள்ளது. முதல்கட்டமாக சத்தியபாமா பல்கலைக்கழகம் ரூ. 6 லட்சம் நிதியை வழங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் சித்தேரி வாய்க்கால் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. வாய்க்கால்களை தூர்வாருவதற்கு நிதி வழங்குவதை ராஜ்நிவாஸ் வரவேற்பதாகவும், அந்த பணம் நேரடியாக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி உதவி அளிக்க பலர் முன்வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.  

 இதையடுத்து நேற்று பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு, ஜேசிபி, ஹிட்டாச்சி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் கிரண்பேடி தலைமையில் நடந்தது. பொதுப்பணித்துறை செயலாளர் திவேஷ்சிங், தலைமை பொறியாளர் சண்முக சுந்தரம், இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார், புதுச்சேரி மாநில அலுவகத்தின் சமைதீன், கவர்னர் மாளிகை சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் மற்றும் 15 ஜேசிபி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் துய்மை பணி சேவை திட்டத்துக்கு  தங்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்குவதாக ஜேசிபி உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான நிதியுதவியை இந்திய தொழில் கூட்டமைப்பு உள்ளிட்டோரிடமிருந்து, நேரடியாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். கள ஆய்வு பணிகள், அதற்கான குழுக்களை தலைமை பொறியாளர் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது. தினமும் செய்யப்படவேண்டிய பணிகள் குறித்து பொதுப்பணித்துறை செயலர் திவேஷ்சிங் தெரிவிப்பார்.  சில ஜேசிபி உரிமையாளர்கள் ஏற்கனவே தூர்வாரும் பணிக்கும் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.தியுதவி அளிப்பவர்கள், இயந்திரங்கள் வழங்குபவர்களுக்கு கவர்னர் மாளிகை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். ஸ்வச் சேவா இயக்கத்தின் பங்களிப்போர் விவரங்கள் அறிக்கையாக பாரத பிரதமருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

Related Stories: