15 ஆண்டுகளில் வெறும் 44 வழக்குகள்தான் பதிவு

புதுச்சேரி, செப் 26:  லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் 15 ஆண்டுகளில் வெறும் 44 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது தகவல் பெறும் உரிமை சட்டத்தில் அம்பலமாகியுள்ளது.புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அலுவலகம் முத்தியால்பேட்டையில் இயங்கி வருகிறது.  தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்து வருகின்றனர். ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் புதுச்சேரியில் நடப்பதில்லை. இதன் காரணமாக நாளடைவில் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். ஆனால் அதற்கு மாறாக சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் குவிந்து வருகிறது.இதற்கிடையே ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவு குறித்து தகவலை பெற்றுள்ளனர்.அதில் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவில் கண்காணிப்பாளர், 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள், 2 துணை உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர் என மொத்தம் 20 பணி புரிந்து வருகின்றனர். கடந்த 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி முதல் 20 ஆண்டுகளாக ரூ. 25 ஆயிரத்து 590 மாத வாடகைக்கு தனியார் கட்டிடத்தில் இயங்குகிறது.  இவர்களுக்கு ஆண்டுக்கு ஊதியம், வாடகை என ரூ. 98 லட்சத்து 60 ஆயிரத்து 508 செலவிடப்பட்டு வருகிறது.லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு வழங்கப்பட்ட பணிகளை சரிவர செய்யாத காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 44 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இத்துறை செயல்பாடின்றி பெயரளவில் செயல்பட்டு வருவது தகவல் பெறும் உரிமை சட்டத்தில் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் தலைவர் ரகுபதி கூறுகையில், புதுச்சேரியில் மக்கள் தொடர்புடைய அனைத்து துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது தொடர்பாக, இத்துறையில் எவரேனும் புகார் அளித்தால், சம்பிரதாயத்துக்கு வழக்கு மட்டும் பதிவு செய்துவிட்டு, தண்டனை பெற்றுத்தர முனைப்பு காட்டுவதில்லை. பொதுமக்கள் புகார் அளித்த பின் இவர்கள் நடவடிக்கை எடுக்கும் முறையை மாற்றி லஞ்சம் அதிகம் உள்ள துறைகளை கண்டறிந்து தினசரி குழுவாக சென்று லஞ்சம் பெறும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவினை அலுவலக வளாகத்திலே நடத்தப்பட்டு வருவதனை மக்கள் முன்னிலையில் பொது அரங்குகளில் வாரம் முழுவதும் நடைபெறச்செய்ய வேண்டும். அதன் மூலம் பொதுமக்களிடம் புகார் பெற்று லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட செய்ய வேண்டும். இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: