ஐஐஎம் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிஏ சேர்க்கை

காலாப்பட்டு, செப். 26:புதுவை பல்கலையில் வரும் கல்வியாண்டு முதல் ஐஐஎம் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிஏ மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து புதுவை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் குர்மீத் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:புதுவை பல்கலைக்கழகத்தில்  எம்பிஏ மேலாண்மை படிப்பு மற்றும் பன்னாட்டு வணிகவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறையில்  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு (2019 - 2020) முதல் புதுவை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க விரும்பும் மாணவர்கள் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ( ஐஐஎம்) சார்பில் இந்தியாவிலுள்ள 147 தேர்வு மையங்களில் வரும் நவம்பர் 25ம் தேதி நடைபெறவுள்ள பொது நுழைவுத்தேர்வினை எழுதி, அதில் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்திய மேலாண்மை நிறுவனமானது, இது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஆக்ஸ்ட் 8ம் தேதியே நுழைவுத் தேர்விற்கான பதிவினை இணையதளத்தில் தொடங்கி விட்டது. இம்மாதம் 26ம் தேதி (இன்று) வரை பதிவு ஏற்கப்படும்.  இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய கேட் 2018 (CAT 2018) என்ற இணையதளம் வழியாக கூடுதல் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரங்கள் அனைத்தும் 2019 ஜனவரியில் வெளியிடப்படும். பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடங்கிய விவரங்களோடு, மாணவர்கள் புதுவை பல்கலைக்கழகத்திற்கான எம்பிஏ மேலாண்மை மற்றும் எம்பிஏ பன்னாட்டு வணிகவியல் படிப்புகளில் 2019-2020ம் கல்வியாண்டில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான பணிகள் ஜனவரி 2019ல் தொடங்கும். பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண் (கேட் 2018) தரவரிசைப்படி விண்ணப்பம் செய்வோர், 2019 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கைக்கு அழைக்கப்படுவார்கள். எம்பிஏ மேலாண்மை மற்றும் எம்பிஏ பன்னாட்டு வணிகவியல் பயில விரும்புகின்ற மாணவர்கள்  அனைவரும் பல்கலைக்கழகத்தின் (www.pondiuni.edu.in)  இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு அதுபற்றிய கூடுதல் விவரங்களை பெறலாம்.  

 புதுவை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிராமத்தை தேர்வு செய்து தத்தெடுத்து கல்வி, மருத்துவம், தூய்மை உள்ளிட்ட சேவைகளை மக்களுக்கு செய்ய வேண்டும். அதில் தூய்மை பணியில் மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும். தத்தெடுக்கும் கிராமத்தில் உள்ள மக்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் பொது சுகாதாரம், கல்வி, மருத்துவம் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பல்கலைக்கழகம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. மத்திய நாக் குழுவானது, புதுவை பல்கலைக்கழகத்தில் தற்போது ஆய்வு நடத்தி சென்றுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அதிக தரமதிப்பீடு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆசிரியர்களும், மாணவர்களும், ஆசிரியரல்லா ஊழியர்களும் இதற்காக பணியாற்றியுள்ளனர். புதுவை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஏற்கனவே பதவிஉயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து நடைபெறும்.புதுவை பல்கலைக்கழகத்தை வளர்ச்சியை நோக்கி நாங்கள் எடுத்துச் செல்கிறோம். மாணவர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள அனைத்து மதத்தினரும் இங்கு படிக்கிறார்கள். ஆகையால், எந்தவொரு அரசியல் சார்பும் இப்பல்கலைக்கழகத்தில் ஊக்குவிக்கப்படாது.இவ்வாறு அவர் கூறினார். துணைவேந்தராக குர்மீத் சிங் பொறுப்பேற்ற பிறகு பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட முதல் செய்தியாளர்கள் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.பேட்டியின்போது, மேலாண்மை துறை புலமுதன்மையர் ஆஞ்சநேய சுவாமி, மேலாண்மைத்துறை தலைவர் சித்ரா சிவசுப்ரமணியன், பன்னாட்டு வணிகவியல் துறை தலைவர் பூஷண் பி சுதாகர், துணை பதிவாளர் (நிர்வாகம்) முரளிதாசன், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் மற்றும் மேலாண்மை, பண்ணாட்டு வணிகவியல் துறை பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

Related Stories: