தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரி காலவரையற்ற தர்ணா

புதுச்சேரி, செப். 26: புதுச்சேரியில் ஏஐடியுசி அகில இந்திய செயல் தலைவர் மகாதேவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புதுச்சேரியில் உள்ள பல பிரச்னைகளுக்கு 2 கட்ட போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மில்களை சீரமைக்க இதுவரை 9 கமிட்டிகள் அமைக்கப்பட்டு எந்த ஒரு அறிக்கையும் தரவில்லை. பல ஆலைகள் மூடப்பட்டுள்ளது. புதிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றிய 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 6 மாதம் முதல் 45 மாதம் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை தரவில்லை. இதனால் அந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றன. புதுச்சேரியில் ஆளும் அரசை மீறி கவர்னர் செயல்பட்டு வருகிறார். அவரும் தொழிலாளர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், உடனே சம்பளம் வழங்க கோரியும் 10 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் அக்டோபரில் சட்டசபை முன்பு காலவரையற்ற தர்ணா நடத்தப்படும்தொழிலாளர் விரோத கொள்கையை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாக வரும் 28ம் தேதி டெல்லியில் ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட 12 மத்திய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இதில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய அளவில் ஸ்டிரைக் போராட்டம் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி ஆரம்பத்திலோ நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, ஏஐடியுசி புதுச்சேரி மாநில செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: