வர்த்தகர்கள் பொது இடத்தில் குப்பை கொட்டினால் உரிமம் ரத்து

காரைக்கால், செப்.26:  காரைக்கால் பகுதி வர்த்தகர்கள் பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால், வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படும். என, மாவட்ட கலெக்டர் கேசவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: காரைக்கால் மாவட்டத்தில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் பங்களிப்போடு, குப்பைகள் தரம் பிரித்து வீடு வீடாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் குப்பைகளை வீடுகள் தோறும் தேடிவரும் நபர்களிடம் வழங்காமல், வீதியில் கொட்டிவருகின்றனர். இன்னும் ஒரு சிலர், வாகனங்களில் சென்றவாறு சாலைகளில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாய் உள்ளது. அதேபோல், வர்த்தகர்கள் சிலர் தங்கள் குப்பைகளை, தங்கள் நிறுவனத்தை ஒட்டிய சாக்கடைகளில் அலட்சியமா கொட்டிவருகின்றனர். இதனால், சாக்கடைகள் அடைத்துகொண்டு, கழிவு நீர் செல்லாமல் தேங்கிவருகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே, பொதுமக்களும், வர்த்தகர்களும் குப்பைகளை உரிய வழியில் சேர்த்து, பொது சுகாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மீறுவோர் மீது, கடும் நடவடிக்கையும், வர்த்தக நிறுவனத்தின் உரிமம்மும் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: