இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு ஓராண்டு சிறை தண்டனை

புதுச்சேரி, செப். 26:  புதுவையில் இன்சூரன்ஸ் பெறுவதற்காக வாகனத்தை மாற்றி மோசடி செய்த வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓய்வுபெற்ற போக்குவரத்து துணை ஆணையருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசின் போக்குவரத்து துறையில் துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்தவர் வீரராகவன். இவரது மகன் கருணாகரன், நண்பர் முத்துக்குமாருடன் கடந்த 2004ல் ஒரே பைக்கில் புதுவை ராஜீவ்காந்தி சிலை அருகே சென்றனர். அப்போது நடந்த ஒரு விபத்தில் கம்பிகள் குத்தியதில் முத்துக்குமாருக்கு கண்கள் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக வாகனத்தை மாற்றியதாக காப்பீட்டு நிறுவனம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. முத்துக்குமார், துணை போக்குவரத்து ஆணையர் வீரராகவன், அப்போதைய போக்குவரத்து ஏட்டு கலியபெருமாள், அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, வீரராகவன் மகன் கருணாகரன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது. 2008ல் புதுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கலியபெருமாள், சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மீதமுள்ள 3 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தலைமை நீதிபதி தனபால் உத்தரவிட்டார். இது தவிர 5 பேருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் தண்டனை பெற்றுள்ள துணை போக்குவரத்து ஆணையர் வீரராகவன் தற்போது ஓய்வு பெற்று விட்டார். அதேபோல், எஸ்ஐ சுந்தரமூர்த்தி இன்ஸ்பெக்டராக பதவிஉயர்வு பெற்று ஓய்வு பெற்று விட்டார். ஏட்டு கலியபெருமாள் வில்லியனூர் போக்குவரத்து போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: