திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கணக்கெடுப்பில் மாநகராட்சிக்கு கூடுதல் மதிப்பெண் கமிஷனர் தகவல்

மதுரை, செப். 26: திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி தேர்வுக்கான கணக்கெடுப்பில், மதுரைக்கு ‘ப்ளஸ், ப்ளஸ்’ மதிப்பெண் வழங்கப்பட உள்ளதாக கமிஷனர் அனீஷ்சேகர் தெரிவித்தார். மதுரை மாநகராட்சி சார்பில், தூய்மை பாரத இயக்க திட்டம் 2019ன் கீழ், மண்டல திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறையை கமிஷனர் அனீஷ்சேகர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மதுரை மாநகராட்சியில் ஆண்டுதோறும் தூய்மை நகருக்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 2018 கணக்கெடுப்பின்போது திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி என்ற சான்று கிடைக்க காலதாமதம் ஏற்பட்டது. இந்த காரணத்தினாலும், ஆவணங்கள் சரியாக வழங்காததாலும், கணக்கெடுப்பில் பின்தங்கும் நிலை ஏற்பட்டது.

தற்போதைய கணக்கெடுப்பில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகர் ‘பிளஸ் பிளஸ்’ மதிப்பெண் வழங்கப்பட உள்ளதால், இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மேலும், இதன் மூலம் மதுரை மாநகரினை தூய்மையான சுகாதாரமான மாநகராக மாற்றுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது’ என்றார். இப்பயிற்சியில் மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மத்திய அரசின் நகர்ப்புற விவகார அமைச்சகத்தை சார்ந்த பேஸ்டினா கோமஸ், சக்தீஸ்வரன், திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் அனிதா, மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், மருத்துவ கண்காணிப்பாளர் இஸ்மாயில் பாத்திமா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: