வரத்து அதிகரிப்பால் கேரட் விலை சரிவு விவசாயிகள் கவலை

மதுரை, செப். 26: மதுரை சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால், கேரட் விலை கடுமையாக குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொடைக்கானல், ஊட்டி, நீலகிரி பகுதிகளில் விளையும் கேரட் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது, இப்பகுதியில் கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன்படி மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட்டிற்கும் கேரட் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை குறைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.30க்கு விற்ற கேரட் தற்போது ரூ.17க்கு விற்பனையாகிறது.

இது குறித்து சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘கேரட் வரத்து இருமடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாதம் முகூர்த்தம் இல்லாததால், தேவையும் குறைவாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.30க்கு விற்ற கேரட், கடந்த வாரம் கிலோவிற்கு ரூ.5 குறைந்து ரூ.25க்கு விற்பனையானது. நேற்று மேலும் கிலோவிற்கு ரூ.8 வரை குறைந்து கிலோ ரூ.17க்கு விற்பனையானது. இதேபோல், ரூ.25க்கு விற்ற டர்னிப் அதிரடியாக குறைந்து கிலோ ரூ.8க்கு விற்றது’ என்றார்.

Related Stories: