திருமங்கலத்தில் ஒரே ஒரு விவசாயி கலந்து கொண்ட குறைதீர் கூட்டம்

திருமங்கலம், செப். 26: பாசி கம்பெனிகளால் விவசாயம் பாதிப்பதாக, திருமங்கலம் குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றம்சாட்டினார். இந்த கூட்டத்தில், விவசாயி ஒருவர் மட்டுமே கலந்து கொண்டதால், அதிகாரிகள் அப்செட் ஆயினர். திருமங்கலம் தாலூகா அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. தாசில்தார் நாகரத்தினம் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை சார்பில் விமலாராணி, வேளாண்மை அலுவலர் ஞானவேல், துணைத்தோட்டக்கலை அலுவலர் காசிமாயன், ஆர்ஐ மவுண்ட்பெட்டன் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். வனத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. ஆனால், குறைதீர் கூட்டத்தில் ஆலம்பட்டியைச் சேர்ந்த விவசாயி வெள்ளையன் மட்டுமே வந்திருந்தார். இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். வெள்ளையன் பேசுகையில், ‘கிழவனேரி மற்றும் வாகைக்குளம் ரோடு, காண்டை பிரிவு பகுதிகளில் உள்ள பாசி கம்பெனிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயமும் பாதிப்பதாக குற்றம்சாட்டினார்.

இது குறித்து தாசில்தார் கூறுகையில், ‘பாசி நிறுவனங்களில் ஆய்வு நடத்தி இது சம்மந்தமாக மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படும். மேலும், தோட்டக்கலை திட்டங்களை மக்கள் அறியும் வகையில், தாலூகா அலுவலகத்தின் ஒரு பகுதியில் மாதிரி தோட்டம் அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் பெருமளவு கலந்து கொண்ட நிலையில் விவசாயிகள் கலந்து கொள்ளாதது, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது விவசாயப் பணிகள் முழுவீச்சில் தாலூகாவில் துவங்கியுள்ளதால், விவசாயிகள் வருகை குறைந்துள்ளது. அடுத்தடுத்த கூட்டங்களில் அதிகரிக்கும்’ என்றனர்.

Related Stories: