குடிநீர் விநியோக குளறுபடியால் 100 நாள் வேலை ‘கட்’ பழநி அருகே மக்கள் மறியல்

பழநி, செப். 26:  பழநி அருகே அ.கலையம்புத்தூர் பகுதியில் குடிநீர் விநியோக குளறுபடியால் 100 நாள் வேலைக்கு செல்ல தாமதமாகிறது. இதனால் அங்கு பணி மறுக்கப்படுவதாக கூறி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பழநி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சரியான நேரங்களில் விநியோகம் செய்யப்படுவதில்லை. காலை, மதியம், மாலை நேரம் என மாற்றி மாற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் 100 நாள் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். குடிநீர் பிடித்து வைத்துவிட்டு செல்லும்போது தாமதமாகுவதால் அங்கு பணி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் விநியோக குளறுபடியை கண்டித்து நேற்று பழநி- உடுமலை தேசிய நெடுஞ்சாலை வண்டிவாய்க்கால் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் போலீசார், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் இனி குடிநீர் சரியான நேரத்தில் விநியோகிக்க  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: