வேலூர் மத்திய சிறையில் நடிகர் கருணாசை சந்தித்த தகுதி நீக்க எம்எல்ஏக்கள்: சக எம்எல்ஏ என்ற முறையில் சந்தித்தோம் என பேட்டி

வேலூர், செப்.26: நடிகர் கருணாசை சக எம்எல்ஏ என்ற முறையில் சந்தித்தோம் என்று வேலூரில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி முக்குலத்தோர் புலிப்படை சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ், தமிழக முதல்வர், காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசினார். மேலும், சாதி ரீதியாக வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். இதனால், சென்னை நுங்கம்பாக்கம் போலீசார், கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கடந்த 23ம் தேதி கருணாசை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று காலை வேலூர் மத்திய சிறையில் உள்ள கருணாசை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான, சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாதன், ஆம்பூர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சந்திக்க சிறைக்கு வந்தனர். ஆனால், சிறை விதிப்படி விசாரணை கைதிகளை செவ்வாய்க்கிழமை பார்க்க முடியாது என்று கூறியதால் திரும்பி சென்றுவிட்டனர். ஆனால், வழக்கறிஞர் என்ற முறையில், தினந்தோறும் மாலை 3 முதல் 5 மணி வரை சந்திக்கலாம் என்ற சிறை விதிப்படி, சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாதன் ஆகியோர் மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை சிறையில் கருணாசை சந்தித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறுகையில், ‘சக எம்எல்ஏ என்ற முறையிலும், வழக்கறிஞர்கள் என்ற முறையிலும் சிறையில் உள்ள கருணாசை சந்தித்தோம். எங்கள் கட்சி தலைமையிடம் தெரிவித்துவிட்டு தான் இந்த சந்திப்பு நடந்தது. இதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. சிறையில் உள்ள கருணாஸ் நலமாக உள்ளார்’ என்றனர்.

Related Stories: