×

திருச்சி பொதுப்பணிதுறை ஆபிசில் திமுக எம்எல்ஏ, விவசாயிகள் மனு

திருச்சி,  செப்.25:  தஞ்சை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை  எடுக்ககோரி திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம், திருவையாறு திமுக  எம்எல்ஏ தலைமையிலான விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில் குமாரிடம், புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் கடைமடை விவசாயிகள் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் தலைமையில் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில், காவிரி ஆற்றில் கரூர் மாவட்டம் மாயனூரில் பிரியும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனம் கடைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதிக்குட்பட்ட பூதலூர், தஞ்சாவூர் ஒன்றியத்தில் 63 ஏரிகளில் 47 ஏரிகளுக்கு இதுவரை பாசனத்துக்கு போதுமான நீர் வரவில்லை. இந்த நிலை கடந்த 6 ஆண்டுகளாக உள்ளது. இதனால் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கிறது.

ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1 வரை, ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 6 வரை மேட்டூர் அணை முழு கொள்ளளவில் இருந்தது. மேட்டூரில் பாசனநீர் முழு கொள்ளளவு இருந்தும், பலமுறை காவிரி ஆற்றில் பாசனநீர் முழுமையாக சென்றும் மாயனூர் அணையிலிருந்து பாசன நீர் திறக்கப்பட்டு தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிகளுக்கு பாசன நீர் வராதது வேதனை அளிக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசும், பொதுப்பணித்துறையும் தனிக்கவனம் செலுத்தினால் தான் பாசனநீர் பெற முடியும். எனவே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

தண்ணீர் திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம் எம்எல்ஏ துரை.சந்திசேகரன் கூறுகையில், சென்னை தலைமை செயலக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, திருச்சி தலைமை பொறியாளரை இன்று (நேற்று) நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது தான். ஒரு வாரத்திற்குள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் கடை மடை விவசாயிகளை திரட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி