முத்துப்பேட்டையில் அங்கன்வாடி பணியாளர் சங்கம் துவக்கம்

முத்துப்பேட்டை, செப்.25: முத்துப்பேட்டையில் அரசு அங்கன்வாடி பணியாளர் சங்கம் துவக்க விழா கூட்டம் நடந்தது. முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயங்கும் அங்கன்வாடி பணியாளர் புனிதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, சத்துணவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், சத்துணவு பணியாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முத்துப்பேட்டை ஒன்றிய அங்கன்வாடி பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சங்கத்தின் ஒன்றியத் தலைவராக புனிதா, செயலாளராக வேதவல்லி, பொருளாளராக தில்லையம்மாள், துணைத் தலைவர்களாக சசிதா, வினோதினி, இணைச் செயலாளர்களாக மகாலட்சுமி, முருகசெல்வி மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சத்துணவு அங்கன்வாடி மையங்களை தனியாரிடம் விடுவதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை ஒருங்கிணைத்து தனித்துறை, தனி இயக்குனரகம், தனித்துறை  அலுவலகம் ஏற்படுத்திட வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி  மையங்களில் ஏற்படும் காலியிட பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பிட வேண்டும். சத்துணவு  அமைப்பாளர்கள் அமர்ந்து பணிபுரிய நாற்காலி மேஜை மற்றும் பதிவேடுகள் வைத்திட பீரோ உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்க வேண்டும் இவ்வாறு ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 கூட்டத்தில் முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர். பணியாளர் உஷா நன்றி கூறினார்.

Related Stories: