மன்னார்குடியில் மருந்து வணிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

மன்னார்குடி,செப்.25: பொது மக்களின் நலனுக்கு எதிரான ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யும் உரிமத்தை மத்திய அரசு அனுமதிக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரி வித்து மன்னார்குடி தாலுக்கா மருந்து வணிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.  ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யும் உரிமத்தை மத்திய அரசு அனுமதிக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா  முழுவதும் வருகிற 28 ம் தேதி மருந்து வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்நிலையில் மக்கள் நலன் கருதி நடைபெறும் இப்போராட்டத்திற்கு  பொது மக்களின் ஆதரவை பெற வேண்டியும், மருந்து வணிகர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கங்களை சேர்ந்த மருந்து வணிகர்கள் வரும் 28 ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவது என முடிவெடுத்துள்ளனர்.

 அந்த வகையில் மன்னார்குடி தாலுக்கா மருந்து வணிகர்கள் நேற்று முதல் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வரு கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில்,  பாரம்பரியமாக மருந்து வணிகம் நடத்தி வரும் 8 லட்சம் உள்நாட்டு சிறுவணிகர்கள், அவர்களின் நிறுவனங்களில் வேலை பார்க்கும் லட்சக் கணக்கான ஊழியர்களுக்கு வேலையில்லாகும் நிலை ஏற்படும். இளைஞர்களை சீரழிக்கும் போதை மாத்திரைகளையும், வீரிய மாத்திரைகளையும் ஆன்லைன் மூலம் வாங்குவது எளிது. இதனால் கலாச்சார சீரழிவு ஏற்படும். எனவே நமது இளைய சமுதாயம் காக்கப்பட ஆன்லைன் மருந்து வணிகத்தை முற்றிலும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என கூறினார்.

Related Stories: