விவசாயிகள், விவசாயத்தை பாதுகாக்க கட்டளைமேட்டு கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும்

தஞ்சை, செப். 25:  விவசாயத்தை பாதுகாக்க கட்டளைமேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்காலில் தொடர்ந்து  தண்ணீர் திறக்க வேண்டுமென தஞ்சையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கட்டளை கால்வாய்,  உய்யக் கொண்டான் பாசன விவசாயிகள் அளித்த மனு: கடந்த 6 ஆண்டுகளாக பருவமழை  இல்லாததாலும், காவிரியில் போதிய நீர் வராததாலும் செங்கிப்பட்டி வருவாய்  பகுதியில் கட்டளைமேட்டு கால்வாய், உய்யக்கொண்டான் பாசனத்துக்கு உட்பட்ட  விவசாய பகுதிகளில் விவசாயம் பொய்த்துபோனது. தற்போது காவிரியில் உபரிநீர்  வந்து பல டிஎம்சி நீர் கடலில் வீணாக கலந்துவிட்டது. அதன்பின் விவசாயிகள்  கோரிக்கையை ஏற்று கலெக்டர் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதன் பலனாக சில  நாட்கள் மட்டுமே இக்கால்வாய்களில் தண்ணீர் வந்தது. வாழ்வா, சாவா என இருந்த  விவசாயிகளுக்கு கலெக்டரின் தலையீடு நம்பிக்கையை அளித்தது. ஆனால் அதன் பிறகு  தண்ணீர் வரவில்லை.

பல ஏரிகளை தண்ணீர் எட்டி பார்க்கவே இல்லை.  இதனால் இந்தாண்டும் விவசாயம் செய்ய முடியாதோ என்ற நிலை உருவாகியுள்ளது.  திருச்சி ஆற்றுப்பாசன கோட்ட அதிகாரிகளை விவசாயிகள் நேரடியாக பலமுறை  சந்தித்தும் அலட்சியப்படுத்தப்படுகின்றனர். இந்நிலை தொடராமல் இருக்க  விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க உயர்மட்ட கட்டளை மேட்டு வாய்க்காலில்  தண்ணீர் தொடர்ந்து திறந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் நீர்நிலை பாது காப்பு அறக்கட்டளை சார்பில் அளித்த மனு:  குடிநீர் தேவைக்காக அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் உள்ள ஏரி, குளங்கள், விவசாய நிலங்களுக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மனு அளித்தும் அதிராம்பட்டினம் கடைமடைக்கு தண்ணீர் திறந்து விடுவது மீண்டும் தாமதமாகியது. இதையடுத்து கடந்த 17ம் தேதி அதிராம்பட்டினத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

அப்போது எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே அதிராம்பட்டினம் கடைமடைக்கு தாமதமின்றி முறை வைக்காமல் நீர் நிரப்பி கொள்ள உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது. வல்லம் பொதுநலக்குழு முருகையன் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு: வல்லம் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சனம்பூண்டி கிராமம் கொள்ளிடத்திலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மாரனேரி அய்யனாபுரம், பூதலூர், சித்திரக்குடி, ஆலக்குடி வழியாக வல்லம் புறவழிச்சாலை அருகில் உள்ள நீர் சேமிக்கும் தொட்டி மூலம் சேமிக்கப்படுகிறது. கொள்ளிடத்தில் இருந்து வரும் குடிநீர் குழாய் பாதைகள் வழியாக காற்று அடைப்பான் தொட்டிகள் உள்ளது. இத்தொட்டிகள் தரைவழி தொட்டியாக அமைந்துள்ளதால் அருகில் உள்ள கிராம மக்கள் இத்தொட்டியில் இறங்கி குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, துணி துவைப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் சுகாதாரமற்ற குடிநீர் வல்லத்திற்கு வந்து சேருகிறது. எனவே காற்று அடைப்பான் குழாய்களை தரைக்கு மேலே யூ வடிவில் அமைத்து குடிநீரை மாசற்ற வகையில் தூய்மையாக சேமித்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட விவசாயிகள் அளித்த மனு: 2016ம் ஆண்டு டிசம்பரில் சம்பாவுக்கான பயிர் காப்பீட்டு பிரிமிய தொகையை முறையாக செலுத்தியுள்ளோம். 17.8.2017 அன்று வழங்கவிருந்த இழப்பீட்டு தொகையை வழங்காமல் ஒவ்வொரு பயனாளிகளிடமும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை வசூல் செய்துவிட்டனர். இதை எதிர்த்து கேட்டால் தொடக்க வேளாண்மை வங்கியிலிருந்து வாய்ப்பு, சலுகை, கடன்கள் மறுக்கப்படும் என்பதால் அச்சத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கேட்டதை கொடுத்துவிட்டனர்.  மேலும் ஒரு வருவாய் கிராமத்தில் பதிவு செய்யப்பட்ட நிலத்தை மற்றொரு வருவாய் கிராமத்தில் பதிவு செய்யப்பட்டதாக சொல்லி தொகையை குறைத்து வழங்கியுள்ளனர். இவர்கள் பயனீட்டாளர்களின் பட்டியலை அச்சிட்டு அறிவிப்பு பலகையில் ஒட்டுவதற்கு கொடுத்த மனுவை கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கிடப்பில் போட்டுள்ளார்.

மேலும் பயனாளிகளிடம் பிடித்தம் செய்த தொகையை மீட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நகை கடனில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு என்ன நடக்கிறது என தெரியாத சூழல் நிலவுகிறது. அவர்கள் காப்பீட்டு தொகை பற்றிய பட்டியலை அறிவிப்பு பலகையில் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அரசு அலுவலர், பணியாளர்கள் தமிழில் கையெழுத்து போடும் அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் மக்கள்  பாதை அமைப்பின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் யாசர் அராபத் அளித்த மனு:  தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரும் தங்களின் பெயரையும், முன்னெழுத்தையும்  தமிழிலேயே இட வேண்டும். ஆங்கிலம் தமிழர்களை மொழியால், உணர்வால் எண்ணத்தால்  அடிமைப்படுத்துகிறது. இதை மாற்ற மக்கள் பாதை முயன்று வருகிறது. அரசு  பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்ற 1978ல் இடப்பட்ட அரசாணையை  மதிக்காத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்நிலையில் மாவட்ட அரசு  அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடு, கடிதம், ஆணை, காலமுறை அறிக்கை,  நாட்குறிப்பு, பெயர் பலகை, முத்திரைகள் ஆகியவை அனைத்தும் தமிழிலேயே அமைய  வேண்டுமென அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டுமென  21.6.1978ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: