5 ஆண்டுகளுக்கு பிறகு சோழன்மாளிகை பெரிய வாய்க்காலை தூர்வாரிய விவசாயிகள்

1கும்பகோணம், செப்.25: கும்பகோணம் அடுத்த சோழன் மாளிகையிலுள்ள பெரியவாய்க்கால், சுந்தரபெருமாள் கோயில் அரசலாற்றிலிருந்து பிரிந்து சோழன்மாளிகை, புதுப்படையூர், கோபிநாதபெருமாள் கோயில், பட்டீஸ்வரம், கொற்கை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 6 கிலோ மீட்டர் பயணம் செய்து சுமார் 7 ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்கு பயன்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆறுகளில் தண்ணீர் வராததால், வாய்க்காலை பற்றி பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் பெரும்பாலான வாய்க்கால் பகுதிகள் தூர்ந்தும், ஆக்ரமிப்பாளர்களால் வாய்க்கால் இருந்த சுவடே தெரியாமல் போனது.  இந்நிலையில் தற்போது திருமலைராஜன் ஆற்றில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்துகொடிருக்கும் நிலையில், சோழன்மாளிகை திருமலைராஜன் ஆற்று வாய்க்கால் பாசன சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளின் புகாருக்கு பதில் எதுவும் கூறாமல் கிடப்பில் போட்டனர்.

இதனால் வேதனையடைந்த விவசாயிகள் சோழன்மாளிகை திருமலைராஜன் ஆற்று வாய்க்கால் பாசன சங்கம் சார்பில் அப்பகுதி விவசாயிகளிடம் இரண்டரை லட்சம்  நிதி திரட்டி பெரிய வாய்க்காலை தூர் வாரினர். பெரியவாய்க்காலை தூர் வாரியதால், சுமார் 6 கிராமங்களுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து சோழன்மாளிகை திருமலைராஜன் ஆற்று வாய்க்கால் பாசன சங்க செயலாளர் இளங்கோவன் கூறுகையில்,சோழன்மாளிகை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நாற்று நடவு செய்துள்ளோம். ஆனால் நடவு செய்ததிலிருந்து தண்ணீர் வாய்க்காலில் வராததால், மின் மோட்டாரை கொண்டு நடவு செய்தோம். தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டால், மின் மோட்டாரும் இயங்கவில்லை. இதனால் பயிர்கள் கருகும் நிலை உருவானது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் பலனில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் பொதுப் பணித்துறையினரிடம் போதிய நிதி இல்லை எனக்கூறி வாய்க்காலை தூர்வாராததை குறித்து ஆய்வு செய்ய வேண்டும், தமிழக அரசு  ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வந்துவிடும், சாகுபடி செய்யலாம் என அறிவித்ததை நம்பி  சாகுபடி செய்த விவசாயிகளை ஏமாற்றியது வேதனையான விஷயமாகும் என்றார்.

Related Stories: