தென்னையில் ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈக்கள் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

பட்டுக்கோட்டை, செப்.25:  தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை சீக்கள் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரம் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் மதுக்கூர் வட்டார வேளாண்மைத் துறை இணைந்து தென்னையில் ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈக்கள் மேலாண்மை குறித்த விவசாயிகள் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. முகாமில் மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர்.  உதவி பேராசிரியர் மதியரசன் வரவேற்றார். பேராசிரியர் மற்றும் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்து தென்னையில் சுருள் வௌ்ளை ஈக்களின் சேதாரம் குறித்தும் மற்றும் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என  விளக்கமளித்தார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய தஞ்சாவூர் மாவட்ட மத்திய திட்ட வேளாண்மை இணை இயக்குநர் இப்பூச்சிகளுக்கு எதிராக இயற்கையிலேயே காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான பச்சைக் கண்ணாடி பூச்சிகள், பொறி வண்டுகள், ஒட்டுண்ணி குளவிகள் முதலியவற்றை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகளை வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் தொழில்நுட்ப உரையாற்றிய ஆழியார் நகர் பூச்சிகள் துறை பேராசிரியர் ராஜமாணிக்கம் இப்பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி முறையில் முட்டை பருவம், கூட்டுப்புழு பருவம், முதிர்ந்த பருவம் தாக்குதல் அறிகுறிகள், தாக்கப்படும் பிற பயிர்கள் குறித்து விரிவாக எடுத்தரைத்தார். தென்னை இலைகளின் கீழ்ப்பகுதியில் காணப்படும் முட்டைகள், இளம்பருவம் மற்றும் முதிர்ந்த பூச்சிகளை விசைத் தெளிப்பான் கொண்டு தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீய்ச்சி அடிப்பதன் மூலம் கட்டுப்படுத்தவும், லிட்டருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவுப்பசையை தண்ணீரில் கரைத்து இலைகளின் மேல் பகுதி நன்கு நனையும்படி தெளித்து கரும்பூஞ்சான வளர்ச்சியை அகற்ற விளக்கமளித்தார். மேலும் தாவரம் சார்ந்த பூச்சி விரட்டிகளான 5 சதவிகித வேப்பங்கொட்டை கரைசல், 10 சதவிகித வேப்ப இலை கரைசல், 0.5 சதவிகித வேப்ப எண்ணெய் கரைசல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்த அறிவுரை வழங்கினார்.

 உதவிப் பேராசிரியர் அழகர், இப்பூச்சிகளை தாக்கி அழிக்கும் என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகளை பயன்படுத்தும் விதம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார். விழிப்புணர்வு முகாமில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் தயாளன், மதுக்கூர் வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் நவீன்சேவியர் நன்றி கூறினார்.

Related Stories: