×

அரிமளத்தில் பரவலாக மழை

திருமயம்,செப்.25: அரிமளத்தில் மற்ற பகுதிகளைவிட அதிகளவு மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் பகல் நேரங்களில் கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மற்ற பகுதிகளை விட அரிமளம் பகுதிகளில் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால் அரிமளம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் குறிப்பிடத்தகுந்த அளவு நீர் நிரம்பி உள்ளது. மேலும் அரிமளத்தில் கடந்தசில நாட்களாகவே மாலை, இரவு நேரங்களில் திடீரென மேகம் கருத்து 30 நிமிடங்கள் வரை நல்ல  மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் துளிர்விட்டு பச்சை பசேலென காட்சியளிக்கிறது.

இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு சற்றே குறைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். அரிமளத்தில் தெடர்ந்து இரண்டு வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் மழை நீண்ட நேரம் தொடர்ந்து பெய்யாமல் இருப்பதால் விவசாயம் செய்யும் அளவுக்கு நீர் நிலைகளில் நீர் சேருவதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இருப்பினும் மற்ற பகுதிகளைவிட அரிமளம் பகுதியில் அதிக மழை பொழிந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மகழ்ச்சியடைந்தள்ளனர். இந்நிலையில் நேற்று ராயவரம், கடியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பொழிவு இருந்த நிலையில் அரிமளத்தில் சுமார் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நேற்று (திங்கள்) பெய்துவரும் மழையால் வாரச்சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர்.

வெயில் காலங்களில் விற்பனை தங்கு தடையின்றி நடக்கும் நிலையில், மழை காலங்களில் பொருட்களை விற்பனை செய்ய வியாபாரிகளும், பொருட்களை வாங்க பொதுமக்களும் பெரும் சிரமப்படுகின்றனர். காரணம் சிறியளவு மழை பெய்தாலும் சந்தை முழுவதும் வயல்போல் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வியாபாரிகள் பொருட்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த முடியாமல் விற்பனை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. மெலும் சேறு, சகதியில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் சுகாதாரா கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம் வாரச்சந்தையில் மேற்கூரையுடன் கூடிய விற்பனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபதே அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...