அரும்பாக்கம், அண்ணாநகர் பகுதியில் தொடர் கைவரிசை கத்திமுனையில் செயின் பறித்த 3 கொள்ளையர்கள் கைது: 41 சவரன் நகை, 2 பைக், ஒரு கார் பறிமுதல்

சென்னை: அரும்பாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த 3 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த நகைகளை விற்று சொகுசு கார் வாங்கி உல்லாச  வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அரும்பாக்கம் ராணி அண்ணாநகர் நாவலர் தெருவை சேர்ந்த திருப்பதி (29)  என்பவர், நேற்று முன்தினம்  அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர் திருப்பதியை வழிமறித்து கத்தி முனையில் அவரை தாக்கி, அவர் அணிந்து இருந்த அரை சவரன் செயின் மற்றும் 400ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அப்போது, அந்த  வழியாக வந்த ரோந்து போலீசாரிடம் திருப்பதி நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் பைக்கில் தப்பி சென்ற 3 வாலிபர்களையும் துரத்தி சென்று பிடித்தனர்.

விசாரணையில், வில்லிவாக்கம் எம்.ஆர். நாயுடு 2வது தெருவை சேர்ந்த சபீர் பாஷா (27), அண்ணாநகர் திருமங்கலம் பிரதான சாலையை சேர்ந்த பிரகாஷ் (29), பெரம்பூர் லூட்டஸ் கார்டன் 2வது தெருவை சேர்ந்த ராஜ்குமார் (24)  என்பதும், சபீர் பாட்ஷா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் இரவு நேரங்களில் பைக்கில் சென்று தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும்  தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் அண்ணாநகர், அரும்பாக்கம், திருமங்கலம், ராஜமங்கலம், திருவிக நகர் மற்றும் பெரவள்ளூர் காவல்நிலையங்களில் செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்கள் வழிப்பறியில் கிடைத்த நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில் சொகுசு கார் மற்றும் 2 பைக்குகள் வங்கி உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து  அவர்களிடம் இருந்து 41 சவரன் நகை, சொகுசு கார், 2 பைக்குகள் பறிமுதல் ெசய்யப்பட்டன.

* ஆதம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதேபகுதி பாரதியார் தெரு, நேரு நகர், ஏ.எஸ்.கே., நகர், மெயின் ரோடு போன்ற பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தியபோது, கணேசன் (55), கண்ணுசாமி (52),  சுப்பிரமணி, (43) ஆகிய 3 பேர் தங்களது கடைகளில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்துவந்தது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல்  செய்தனர்.

* வடபழனி 100 அடி சாலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வடபழனியை சேர்ந்த சுந்தர் (40), குழந்தைவேல் (42), பிரவீன்குமார் (43), வேலாயுதம் (45), சசிதரன் (63), சாலிகிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (47), அடையாரை சேர்ந்த  சரவணன் (59) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹4,300 பணம் மற்றும் 3 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் ெசய்யப்பட்டன.

Related Stories: