ஈஞ்சம்பாக்கத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து நாற்று நடும் போராட்டம்

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து நாற்று நடும் போராட்டத்துக்கு மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி 196வது வார்டுக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் தெற்கு பெத்தேல்  நகர் உள்ளது. இங்குள்ள சோழமண்டலம் தேவி நகரில் 11 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தற்போது, அடிக்கடி மழை  பெய்வதால், சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. கழிவுநீரும் தேங்குவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி  மக்கள் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், நேற்று காலை சகதியாக உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி, அக்கட்சியினர் மற்றும் ஏராளமான பெண்கள், நேற்று காலை  அச்சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டகாரர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து,  போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: