மின் விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கும் ரேடியல் சாலை: வழிப்பறி சம்பவம் அதிகரிப்பு, அச்சத்தில் வாகன ஓட்டிகள்

வேளச்சேரி: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து  வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.  பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை - துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையை இணைக்கும் வகையில், ரேடியல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை சென்னை  மாநகராட்சிக்கு உட்பட்ட துரைப்பாக்கத்தில் துவங்கி பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம் ஊராட்சி, பல்லாவரம் நகராட்சி நகராட்சிக்கு உட்பட்ட கீழ்கட்டளை வழியாக சென்று பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இணைகிறது.

ஜிஎஸ்டி சாலையில் இருந்து ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஐடி நிறுவனங்கள், கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளுக்கு செல்வோர், அதேபோல் மேற்கண்ட பகுதிகளில் இருந்து தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, விமான  நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு செல்வோர் இந்த ரேடியல் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இதனால், நெரிசலை குறைக்க தற்போது ரேடியல் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சாலையில் மாநகராட்சி மற்றும்  பல்லாவரம் நகராட்சி எல்லை பகுதியில் மட்டும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கோவிலம்பாக்கம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இதுவரை மின் விளக்குகள்  அமைக்கப்படவில்லை. அதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘மின் விளக்கு இல்லாத பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், இதை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள்  பல இடங்களில் பழுதாகி எரியாமல் உள்ளது. இதை சீரமைக்கவில்லை. இதனால், ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, கோவிலம்பாக்கம்  ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிலோ மீட்டர் தூர சாலையில் மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: