முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை

சேலம், செப்.25: சேலத்தில் நடக்கும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மதியம் சேலம் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று (25ம் தேதி), கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. சேலம் கோட்டை மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசவுள்ளார். இதற்காக அவர், இன்று காலை திருப்பதியில் இருந்து காரில் புறப்பட்டு சேலம் வருகிறார். சேலம் மாநகருக்கு மதியம் 2 மணிக்கு வந்து சேருகிறார். அவருக்கு சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, பன்னீர்செல்வம் எம்பி, சக்திவேல் எம்எல்ஏ மற்றும் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமையிலான நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கோட்டை மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, 8 மணிக்குள் பேசி முடிக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் திரளாக கட்சி நிர்வாகிகளும், சார்பு அணியினரும், தொண்டர்களும் கலந்துகொள்ள வேண்டும் என மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் வருகையையொட்டி, அவர் வரும் வழித்தடமான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பொதுக்கூட்டம் நடக்கும் கோட்டை மைதான பகுதியில், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். கூட்டத்தில் பேசி முடித்ததும், முதல்வர் பழனிசாமி, கோவைக்கு காரில் புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து இரவே, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Related Stories: